சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம், மத்தியக் குழு உறுப்பினர் பாலபாரதி தலைமையில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநிலக் குழு கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனமும், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்துதல் போன்றவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், "நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் மாநிலக் குழு கூட்டம் இது, வருகிற 22ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதலாக வரியில் சலுகைகள் கொடுக்கக் கூடாது. அதற்கு மாறாக பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் வரியை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது வருத்தத்துக்கும், கண்டனத்திற்கும் உரியது. அதே நேரத்தில், சமூக விரோதிகளை எதிர்க்கிறோம் என்ற பெயரில் காவல்துறை என்கவுண்டர் செய்வது சரியான நடைமுறை அல்ல, அது மோசமான கண்டனத்திற்குரிய நடைமுறை.
காவல்துறையே நீதிபதியாக மாறி தண்டனை வழங்குவது சரியான நடவடிக்கை அல்ல. திருவேங்கடத்தின் என்கவுண்டர் காவல்துறையின் மீது நம்பிக்கையின்மையை அதிகப்படுத்தியுள்ளது. தமிழக அரசு காவல்துறைக்கு கட்டுப்பாடற்ற அங்கீகாரத்தை வழங்கக் கூடாது. மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை அவசியமற்றது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு காவல்துறையினுடைய விசாரணையே போதுமானது" என்று தெரிவித்தார்.
தொடர்ச்சியாக பேசிய அவர், "அதிமுக ஆட்சியில் குறைவான விலைக்கு வாங்க வேண்டிய நிலக்கரியை அதானியிடம் அதிக விலைக்கு வாங்கிய காரணத்தினால் மின்வாரியத்துக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அதிகமாக சுமையை தாங்கிக் கொண்டிருக்கும் தமிழக மக்கள் மீது மின் கட்டண சுமையை தமிழக அரசு சுமத்தக் கூடாது, அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. ஆகவே, தமிழ்நாடு அரசு மின்சார கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் பாதிப்புகள் வரும் போது கூட்டணியாக இருந்தாலும் கேள்விகள் கேட்போம்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் குறியீட்டெண் உயர்வுக்கு தகுந்தாற் போல் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்று மத்திய அரசு கட்டாயப்படுத்துவதை கண்டித்தும், அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி மாதந்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்திடக் கோரியும், தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை தமிழ்நாடு அரசே உற்பத்தி செய்யும் வகையில் புதியமின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்திட கோரியும், மக்கள் வாங்கும் கட்டணத்தில் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு முடிவு செய்துள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க:“பாசிச சக்திகள் அவதூறு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” - செல்வப்பெருந்தகை பேச்சு!