மதுரை: திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபு மீதான வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கத் தனக்கு 3 கோடி லஞ்சம் வேண்டும் என மதுரை அமலாக்கத் துறையில் பணிபுரியும் துணை இயக்குநர் அங்கித் திவாரி மருத்துவர் சுரேஷ் பாபுவை அணுகியதாகவும், 3 கோடிக்கு ஒத்துக் கொள்ளாத நிலையில் ரூ 51 லட்சம் கண்டிப்பான முறையில் தர வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பரில் ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார். தொடர்ந்து வாட்ஸ் ஆப் மூலமாக அங்கித் திவாரி மீதியுள்ள ரூ.31 லட்சத்தைக் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், இதனை அடுத்து மருத்துவர் சுரேஷ் பாபு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த புகாரின் பேரில் போலீசார் ரசாயனக் கலவைகள் தடவிய 500 ரூபாய் நோட்டு கட்டுகளை பேக்கில் வைத்து சுரேஷ் பாபு கொடுத்துள்ளார். இதனை அறிந்து தப்பிக்க முயன்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை, லஞ்ச ஒழிப்புத் துறை காரில் விரட்டி பிடித்து கைது செய்தது திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி திண்டுக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கீத் திவாரி மனுத் தாக்கல் செய்திருந்தார் ஜாமீன் வழங்க மறுத்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்து. இந்த நிலையில் இரண்டாவது முறையாக உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அங்கீத் திவாரி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.