தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு பாண்டியன் நெடுஞ்செழியன் பெயர்" - தமிழ்த்தேசிய அமைப்புகள் கோரிக்கை!

Jallikattu Stadium: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரைச் சூட்ட வேண்டும் என தமிழ்த்தேசிய அமைப்புகள் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 8:31 PM IST

"ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரை சூட்ட வேண்டும்" - தமிழ்த்தேசிய அமைப்புகள் கோரிக்கை!

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகேயுள்ள கீழக்கரை கிராமத்தில் சுமார் ரூ.44 கோடி செலவில் ஜல்லிக்கட்டு அரங்கம் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ளது. அண்மையில் இதற்குக் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தமிழ்த்தேசிய அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மதுரை, பழங்காநத்தம் ரவுண்டானா அருகே தமிழ்த்தேசிய அமைப்புகள் சார்பாக நடைபெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் 'ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்' பெயரைச் சூட்ட வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டது. இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் கதிர்நிலவன் கூறுகையில், "அலங்காநல்லூர் அருகே உருவாக்கப்பட்ட ஜல்லிக்கட்டு அரங்கத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என அந்த அரங்கிற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசிய அமைப்புகளின் சார்பில் கடந்த வாரம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மதுரையை ஆண்ட மாமன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனின் பெயரைச் சூட்ட வலியுறுத்தி மனு கொடுத்தோம். இதற்கு ஆட்சியர் பரிசீலித்து முடிவை அறிவிப்போம் என்றார்.

நாங்கள் மனு கொடுத்த மூன்று நாட்களுக்குப் பிறகு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரைச் சூட்டி அறிவித்துள்ளார்கள். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என ஒட்டு மொத்த தமிழர்களால் நடத்தப்பட்டதுதான் ஜல்லிக்கட்டுப் போராட்டம். இதற்காகச் சென்னை மெரினாவில் மட்டும் ஒரு லட்சம் பேர் கூடினர். அவ்வாறு இருக்க, பொதுமக்களிடம் கருத்தே கேட்காமல் கருணாநிதியின் பெயரைச் சூட்டியிருப்பது மோசடித்தனமானது.

ஜல்லிக்கட்டுக்காகப் போராடியவர்களின் பெயரையோ அல்லது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அதில் இறுதி செய்யப்பட்ட பெயரையோ சூட்டியிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளது.

வடநாட்டு ஆரிய மன்னர்களைப் போரிட்டு வென்று ஆட்சி புரிந்தவன் பாண்டியன் நெடுஞ்செழியன். அதனாலேயே அவர் ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் என அழைக்கப்பட்டார். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டை எதிர்த்தவர்கள் ஆரிய மரபில் வந்த வடவர்களே. அதனாலே பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரை ஜல்லிக்கட்டு அரங்கத்திற்குச் சூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

அது மட்டுமன்றி பாண்டியப் பேரரசுக்கு கி.மு.வில் தொடங்கி கி.பி.14ஆம் நூற்றாண்டு வரை நீண்ட நெடிய மரபு உள்ளது. அதற்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரை அந்த அரங்கத்திற்குத் தமிழக அரசு சூட்ட வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி! அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி சாமி தரிசனம்!

ABOUT THE AUTHOR

...view details