தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4 ஆண்டுகளில் 240 கொலைகள்! கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை? - ஆர்டிஐ-யில் அதிர்ச்சி தகவல் - RTI about Tirunelveli murder cases

RTI Revealed Nellai Murder Cases: கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் நெல்லையில் சுமார் 240 கொலைகள் அரங்கேறியுள்ளதாக ஆர்டிஐ மூலம் வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மற்றும் கொலை தொடர்பான கோப்புப்படம்
நெல்லை மற்றும் கொலை தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 8:56 AM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 240 கொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், இக்கொலை சம்பவங்களில் 48 சிறார்கள் உட்பட 887 பேர் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஐ (Right To Information - RTI) மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வற்றாத ஜீவநதி தாமிரபரணி, மேற்கு தொடர்ச்சி மலை என இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் தென்னகத்தின் முக்கிய மாவட்டமாக, நெல்லை உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக கல்வி மற்றும் பொருளாதாரத்தில் நெல்லை மாவட்டம், படிப்படியாக முன்னேறி வந்தாலும், நெல்லை மாவட்டத்தில் அரங்கேறும் கொலை சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது. குறிப்பாக, நெல்லை மாநகர் பகுதியில் கடந்த 2 தினங்களில் பட்டப்பகலில், அதுவும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கொடூரமான முறையில் 2 கொலைகள் அரங்கேறி உள்ளது.

ஆர்டிஐ-யில்அதிர்ச்சி தகவல்:இந்த கொலை சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை கொலைகள் நடந்துள்ளன? இந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பாக எத்தனை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்டது. அதில், அதிர்ச்சி அளிக்கும் வகையிலான தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கொலை சம்பவங்களும், கைது செய்யப்பட்டவர்களும் தொடர்பாக கேட்டதில், "நெல்லை மாநகரில் 58 கொலைகளும், நெல்லை மாவட்டத்தின் புறநகரில் 182 கொலைகள் என மொத்தமாக சுமார் 240 கொலைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆணவக் கொலை 1, முன்விரோத கொலைகள் 45, சாதிய கொலைகள் 16 நடைபெற்றுள்ளதாகவும்" அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, "மாவட்டம் முழுவதும் கொலை வழக்கில் ஈடுபட்டதாக சுமார் 887 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாநகர் பகுதியில் 92 பேர்கள், புறநகர் பகுதியில் 243 பேர் என மொத்தம் 335 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை சம்பவத்தில் சிறார்கள் கைது?:தற்போது வரை நெல்லை புறநகர் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக 7 பேர் மட்டும் தலைமறைவாக இருப்பதாகவும், மாநகரப் பகுதியில் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த கொலை சம்பவத்தில் சுமார் 48 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்; அதில் அதிக அளவு புறநகர் பகுதியைச் சேர்ந்த 42 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்" காவல்துறை தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆர்டிஐ தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

பொதுவாக, இதுபோன்ற கொலை சம்பவங்களில் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் அதிக அளவில் ஈடுபடுவதாக காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதை குழியில் தள்ளும் சைபர் க்ரைம் மோசடிகள்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details