சென்னை: திருச்சியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்த புகாரில், கடந்த 2008ஆம் ஆண்டு தனது மருமகன் குமாரை துப்பாக்கி முனையில் காவல்துறையினர் அழைத்துச் சென்றதாகவும், மேலும் அவரை விடுவிக்குமாறு கேட்டதற்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் விடுவிப்பதாக காவல்துறையினர் தெரிவித்ததாகவும், 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தும் மீத பணத்தைக் கொடுக்கவில்லை எனக் கூறி, தனது மருமகனை விடுவிக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனது மருமகனை மீட்க கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்ததால் ஆத்திரமடைந்த போலீசார், தனது கணவரையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று கொடுமைப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
இந்த புகார், ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் முன்பு விசாரணைக்கு வந்த போது, திருச்சி துறையூர் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் ராஜசேகர் உள்ளிட்ட போலீசார், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். குமார் உடன் குவாரியில் பணிபுரிந்த பெண் கொலை தொடர்பான வழக்கின் விசாரணைக்கு அவரை அழைத்துச் சென்றதாகவும், தங்களுக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.