விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கோட்டைமேடு பகுதியில் கடந்த 18ஆம் தேதி இரவு கள்ளச்சாராயம் வாங்கி குடித்த பலருக்கு வயிற்று வலி, கண்பார்வை இழப்பு உள்ளிட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போது தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட நபர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், கர்ணாபுரம் கிராமத்தில் மட்டும், தெருவுக்கு ஒரு நபர் என பலர் உயிரிழந்துள்ளனர்.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார், இவர் பூக்கடையில் தினக்கூலி ஊழியராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர்களில் மனோஜ் குமாரும் ஒருவர். தற்போது மனோஜ் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.