திருநெல்வேலி:நெல்லையைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் உடையார், நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தோல்வி அடைந்தது தொடர்பாக பாஜக மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வனிடம் பேசிய பரபரப்பு ஆடியோ ஒன்று நேற்று வெளியானது.
அந்த ஆடியோவில் பேசிய உடையார், "தமிழ்நாட்டில் இந்துக்கள் அனைவரும் பைத்தியக்காரர்களாக உள்ளார்கள். சாதி ரீதியாக பாஜகவை அழிக்க முடிவு பண்ணிவிட்டார்கள். ஆனால், இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத்தை மேடைக்கு அழைக்கவில்லை. அவர், 38 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். அவரை பாஜக புறக்கணித்து விட்டது என மனக்குமுறலோடு தெரிவித்து இருந்தார்.
மேலும், இந்து முன்னணியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் மடத்துச் சொத்துக்களை ஆட்டையை போட்டுள்ளார்கள். ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் தமிழகத்தில் கட்ட மண்ணாக மாறிவிட்டது. தென்காசி குமார் பாண்டியன் குடும்பத்திற்காக இந்து முன்னணியினர் நாலரை கோடி ரூபாய் பிரித்தார்கள். ஆனால், அவர் குடும்பத்திற்கு ஒன்றுமே கொடுக்கவில்லை.
கேசவ விநாயகம் போன்றோர் பாஜகவை அழிப்பதில் நம்பர் ஒன்றாக உள்ளனர். கலவரம் பண்ணினால் தான் பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியும் என ஆக்ரோஷமாக பேசியிருந்தார். மேலும், பாஜகவில் மாநில பொறுப்பில் இருக்கும் கேசவ விநாயகத்தை பொது மேடையில் நான் தான் செருப்பைக் கழற்றி அடிப்பேன்" என்று ஆடியோவில் உடையார் பேசியிருந்தார்.
இந்த ஆடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று (ஜூன் 11) பாளையங்கோட்டை போலீசார் உடையாரை அதிரடியாக கைது செய்தனர். பாளையங்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் துரைப்பாண்டி சமூக வலைத்தளப் பக்கத்தில் உடையார் தொடர்பான ஆடியோவை கேட்டதாகவும், அதில் மக்கள் மத்தியில் பிரச்னையைத் தூண்டும் விதமாகப் பேசியதாலும் உடையார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். உடையார் மீது 153, 153ஏ, 504, 505(2) ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்து மக்கள் கட்சியின் தமிழக மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் மாவட்ட தலைவருமான உடையார், கட்சிக் கொள்கைகளுக்கு விரோதமாக கலவரம் செய்தால் தான் பாஜக வளரும் என்று தொலைபேசி உரையாடலில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் உள்விவகாரங்களில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி தலையிடுவது இந்து மக்கள் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானதாகும். பாஜக மாவட்டத் தலைவரோடு தான் நடத்திய உரையாடலை பதிவு செய்து பொதுவெளியில் வெளியிட்டு இந்து இயக்கங்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்.
எனவே, இந்து மக்கள் கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார். இது அவர் மீது மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கை ஆகும். 90 நாட்களுக்குள் அவரிடம் விளக்கம் கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கட்சி நிர்வாகிகள் யாரும் அவரோடு இணைந்து செயல்பட்டால், அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:“கலவரம் பண்ணினால் தான் தமிழகத்தில் காலூன்ற முடியும்.. நயினார் கொடுத்த பணம் என்ன ஆச்சு?” - வைரல் ஆடியோ சர்ச்சை! - BJP vs Hindu Makkal Katchi AUDIO