மதுரை: வேடசந்தூரைச் சேர்ந்த மரியசெல்வி என்பவர், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது தாய் மாமா அந்தோணி பாப்புசாமி, மதுரை உயர் மறை மாவட்ட பேராயராக உள்ளார்.
இந்த நிலையில், சிலரின் தூண்டுதலின் பேரில் அவர் மீதும் மேலும் சிலர் மீதும் அவதூறு பரப்பும் வகையில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான விருந்தினர் மாளிகையில் பல தகாத செயல்களில் ஈடுபட்டர் என தனியார் வார இதழ் ஒன்றில் செய்தி வெளியிட்டு உள்ளனர்.
இந்த செய்தி, அவரது மரியாதையைச் சீர்குலைக்கும் வகையிலும், மதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் உள்ளது. எனவே, இந்த தவறான செய்தியை வெளியிட்ட நிருபர் மற்றும் வெளியீட்டாளர் மீது அவதூறு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், "இது தொடர்பாகக் கொடைக்கானல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதித்துறை நடுவர் தள்ளுபடி செய்தது ஏற்கத்தக்கது அல்ல.
மேலும், செய்தியாளரும், வெளியீட்டாளரும் போதுமான ஆவணங்கள் ஏதும் இன்றி இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர். ஆகவே, இந்த செய்தியை வெளியிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து முறையாக விசாரித்து இறுதி அறிக்கையை 6 மாதத்திற்கு உள்ளாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
இதுமட்டும் அல்லாது, "ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கைத் துறை செய்திகளை வெளியிடுவதற்கு முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். தனிமனித உரிமை, பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் சமூகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிரச் கவுன்சீலுக்கு இந்த நீதிமன்றம் பரிந்துரையை வழங்குகிறது.
செய்தியை வெளியிடுவதற்கு முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவது தொடர்பாக வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க வேண்டும். வெளியீட்டாளரும் ஒரு மனிதரே. ஆகவே, அவரும் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பாக உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.
சமூகத்தில் பலராலும் பின்பற்றப்படும் நிலையில் இருப்பவர்கள் தொடர்பான செய்திகளை, குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்பாக, அது தொடர்பான உண்மைத் தன்மையை ஆய்வு செய்து அதற்கான ஆவணங்களைச் சேகரித்து, அதன் பின்னரே செய்தியை வெளியிட வேண்டும்" என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க:மர்மமான முறையில் இறந்த நபரின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது மதுரை ஐக்கோர்ட்! முழு விபரம் என்ன?