தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைகையாற்றில் சிசிடிவி பொருத்த வேண்டும் - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்! - CCTV FOR MONITOR VAIGAI RIVER

வைகை ஆற்றில் குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆற்றை தூய்மையாக வைத்திருக்க மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

வைகை ஆறு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
வைகை ஆறு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2024, 5:38 PM IST

மதுரை:சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் ஆதனூர் கிராமம் கீழப்பசலை பகுதியைச் சேர்ந்த சங்கர் தாக்கல் செய்த மனுவில், “வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை செழிக்க வைக்கிறது. சிவகங்கை மாவட்டம், ஆதனூர் கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தினை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஆதனூர் கண்மாயின் கொள்ளளவு 22.87 மில்லியன் கன அடி ஆகவும், பாசன பரப்பு 220.49 ஏக்கர் ஆகவும் உள்ளது.

வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, ஆதனூர் கண்மாய்க்கு விவசாயப் பயன்பாட்டிற்கு தண்ணீர் சேமித்து வைக்கப்படும். தற்போது வைகை ஆற்றில் மழைநீர் வந்து கொண்டு இருக்கிறது. ஆகவே, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டபடி, ஆதனூர் கண்மாய்க்கு நீர் நிரப்பி விவசாயத்தை பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:தனிநபர் உரிமையை மீறும் ஆவணங்கள் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மதுரை வைகை ஆற்றின் கரையோரம், மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் குடியிருப்போர், வைகை ஆற்றில் கழிவுகளைக் கொட்டிச் செல்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள், ஒருவருக்கு அடிப்படை உரிமைகள் இருப்பதைப் போல் அடிப்படை கடமைகளும் உள்ளன.

வைகை ஆற்றில் வாகனங்களை நிறுத்தி சுத்தம் செய்கின்றனர், குப்பை கொட்டுகின்றனர். இதே நான் நேரில் பார்த்தேன். குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்று நீரை, மாசுபடாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா? வைகை ஆற்றில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகையை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க, மதுரை மாநாகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகள் இருப்பது போல், அடிப்படை கடமைகளும் உள்ளன. இயற்கை வளங்களை பாதுகாக்க இங்குள்ள ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனக்கூறி மனுதாரரின் மனு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details