மதுரை:திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உலுப்பகுடி பகுதியில் விவசாயம் செய்து வருகிறேன். இப்பகுதி முழுமையாக விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. இந்நிலையில் சில நாட்களாக மணிமுத்தாறு பகுதியில் சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு சட்ட விரோதமாக பல டிப்பர் லாரிகளில் மணல் அள்ளி விற்பனை செய்து வருகின்றனர்.
அங்கு நான் சென்று பார்த்தபோது, அங்கிருந்தவர் என்னை அங்கிருந்து செல்லுமாறு கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையினரிடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விசாரித்த போது, தாடிக்கொம்பு பகுதியில் மண் அள்ளுவதற்கு பெற்ற அனுமதியை சட்டவிரோதமாக பயன்படுத்தி, உலுப்பகுடியில் உள்ள கருப்பு கோயில் குட்டு பகுதியில் மணல் எடுத்து வருகின்றனர். இதனால் அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மேலும் இதற்கு கனிம வளத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றனர். ஆகவே திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உலுப்பகுடி, ஊராளிபட்டி கிராமத்தில் மணிமுத்தாறு பகுதியை ஒட்டி உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மணல் எடுக்க தடை விதிப்பதோடு, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உலுப்பகுடி, ஊராளிபட்டி கிராம அரசு புறம்போக்கு நிலங்களில் எடுக்கப்பட்ட மணல் அளவு குறித்து ஆய்வு செய்வதோடு, அதற்கு துணை போன கனிம வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.