மதுரை:ராமநாதபுரத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிப்பிற்காக ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் அபிஷேக், போலியான நீட் மதிப்பெண் சான்றிதழ் அளித்த விவகாரத்தில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவன் கைது: இது தொடர்பாக கேணிக்கரை போலீசார் அளித்த முதல் தகவல் அறிக்கையின்படி, "இமாசலப் பிரதேசத்தில் பிறந்து, ஹரியானா மாநிலத்தில் பள்ளி படிப்பை முடித்த அபிஷேக் (22) என்ற நபர், ஏற்கனவே நீட் தேர்வு எழுதி இரண்டு முறை தேர்வாகவில்லை. இந்த வருடம் மீண்டும் நீட் தேர்வு எழுதியுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் அனுமந்த்ராவ் பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu) இதில் தான் தேர்ச்சி பெற்றுவிட்டதாகக் கூறி தன்னுடைய தந்தையுடன் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக ராமநாதபுரம் வந்துள்ளார். பின்னர் அங்குள்ள மருத்துவ நிர்வாகிகளிடம் தன்னுடைய மதிப்பெண் சான்றிதழை மொபைல் மூலம் காண்பித்துள்ளார். அதில் 720க்கு 689 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் எனவும் அகில இந்திய அளவில் 4392ஆவது ரேங்க் பெற்றுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்திய சுகாதரக் குழு அனுப்பிய 3 சுற்று மாணவர்களின் பட்டியலில் அபிஷேக் பெயர் இடம் பெறவில்லை. மேலும் மாணவன் காண்பித்த சான்றிதழில் NTAவின் கையொப்பமும் இடம் பெறவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நிர்வாகிகள் மாணவனின் பதிவெண் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றைச் சோதனை செய்துள்ளனர்.
அதில் மாணவன் அபிஷேக் நீட் தேர்வில் 720க்கு 60 மதிப்பெண்கள் பெற்றதும், அகில இந்திய அளவில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 349 ரேங்க் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த அசல் சான்றிதழை அதிகாரப்பூர்வ பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அதனை எடிட் செய்ததும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, FIR NO- 542 பிரிவுகள் 336(2), 336(3), 336(4) தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவு எண் 73 மற்றும் 74 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள கேணிக்கரை போலீசார் மாணவன் மற்றும் அவரது தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:உயர் கல்வியில் மாணவர்களுக்கான சவால்கள்? - ஐஐடி மாணவர்களின் மாநாடு!
தவறான நபர்களால் ஏமாற்றப்பட்டு இருக்கலாம்?இந்த விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைந்துள்ள நிர்வாக அலுவலகத்தில் மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் அனுமந்த்ராவ் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்காக சிறப்பு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ஹிமாச்சல் பிரதேசம் சிம்லாவைச் சேர்ந்த மாணவர் அபிஷேக், போலியான நீட் மதிப்பெண் சான்றிதழோடு எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு சேர்க்கைக்காக விண்ணப்பம் செய்த போது, அங்குள்ள எய்ம்ஸ் நிர்வாகத்தால் இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டது.
அது மட்டுமன்றி, யாரோ சில நபர்களால் அந்த மாணவர் ஏமாற்றப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. உடனடியாக, ராமநாதபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த மாணவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது எதிர்பாராத சம்பவம் என்றாலும் கூட, மாணவர் அபிஷேக் வட மாநிலத்தைச் சேர்ந்த சில தவறான நபர்களால் ஏமாற்றப்பட்டு இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.
மருத்துவ படிப்புகளுக்காக விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்கள், நீட்டுக்காக உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தையே பயன்படுத்த வேண்டும். இல்லை எனில், சில தவறான அமைப்புகளால் இது போன்ற ஏமாற்றத்திற்கு ஆளாக நேரிடலாம். நீட் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஒதுக்கீட்டுக் கடிதம் ஆகியவை அசலாக இருப்பதை உறுதி செய்து கொள்வது மிக அவசியம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மாணவர்கள் மட்டுமின்றி, மாணவர்களின் பெற்றோரும் இது போன்ற தவறான ஏஜென்சிகள் குறித்து அதிக விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களுக்கான சான்றிதழ்களை முறையாக தரவிறக்கம் செய்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை அணுகுவது தான் சிறப்பு. எதிர்காலத்தில் இது போன்ற தவறான செயல்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது என்பதை எனது அறிவுரையாக கூறிக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.