சென்னை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை லஞ்சம் பெற்று விற்க அனுமதித்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கை விசாரிக்க ஒப்புதல் அளித்து தமிழக ஆளுநர் பிறப்பித்த உத்தரவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் 16வது நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை நடத்த ஒப்புதல் அளித்து பிறப்பித்த உத்தரவில் 17வது நபராக குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளிக்க சிபிஐ புலன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புலன் விசாரணை அதிகாரி தரப்பில் விளக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், விஜயபாஸ்கர் 16வது நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்றும், ஒப்புதல் உத்தரவில் 17 என்பது வரிசை எண் எனவும், கூடுதல் குற்றப்பத்திரிகையில் எந்த குறைபாடும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விளக்க மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், இந்த வழக்கை எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றுவது தொடர்பாக உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க, சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் முதன்மை சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் அனுப்ப பரிந்துரைத்து, விசாரணையை ஜூன் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:சட்டவிரோத குட்கா விற்பனை வழக்கு; பி.வி.ரமணா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைத்தது சிபிஐ நீதிமன்றம்