சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பொது மேடைகளிலும், சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கூறும் கருத்துக்கள் சில பேசு பொருளாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 23ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஷின் 127வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார்.
இது குறித்து ஆளுநர் தான் கூறப்பட்டு கருத்து வேறு விதத்தில் திரிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஜனவரி 23, 2024 அன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாளன்று நான் பேசியதைத் தொடர்ந்து, சில ஊடகங்கள் எனது பேச்சில் சில வார்த்தைகளில் குறிப்பிட்டவற்றைத் தேர்ந்தெடுத்து நான் பேச விழைந்த நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளன.
எனது உரையில், நமது தேசத்தின் சுதந்திரத்துக்காக நேதாஜி வழங்கிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை விரிவாகக் கூற முயன்றேன். பிப்ரவரி 1946-இல் ராயல் இந்திய கடற்படை மற்றும் விமானப்படை என இரண்டிலும் நடந்த கிளர்ச்சிகள், நேதாஜியால் ஈர்க்கப்பட்டவர்களால் ஏற்பட்டதால்தான் 1947ஆம் ஆண்டில் சுதந்திரம் கிடைப்பதற்கான வேகமும் செயல்முறையும் துரிதமாகின என்ற கருத்தை நான் பதிவு செய்ய விழைந்தேன்.
ஏனென்றால் இந்தக் கிளர்ச்சிகள் காரணமாகவே, பிரிட்டிஷார் பீதியடைந்தனர். ஏனென்றால் சீருடையில் இருந்த இந்தியர்களை இனியும் நம்பமுடியாது, சொந்த பாதுகாப்பு மற்றும் இந்தியாவில் பாதுகாப்பு இருக்காது என பிரிட்டிஷார் கருதினர். இந்தக் கிளர்ச்சிகள் 1946 பிப்ரவரியில் நடந்தன. அதற்கு அடுத்த மாதமான 1946 மார்ச் மாதமே இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக ஆங்கிலேயர்கள் பகிரங்கமாக அறிவித்து தங்கள் நேர்மையை வெளிப்படுத்தவும், கிளர்ந்தெழுந்த இந்தியர்களின் உணர்வுகளைத் தணிக்கவும், கிளர்ச்சிகளைத் தடுக்கவும் அரசியல் நிர்ணய சபையை அமைத்தனர்.