மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
மேலும், இதுபோன்று யாராவது பாதிக்கப்பட்டால் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அப்போது, அப்பள்ளியில் 7,8,9ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகள் 9 பேர் தங்களிடம் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் ஒருவர் பாலியல்ரீதியில் தொந்தரவு செய்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து வகுப்பு ஆசிரியர் உள்ளிட்டோரிடம் அப்போதே தெரிவித்ததாகவும், அதனை அறிந்தும் பள்ளியின் தலைமை ஆசிரியை. பட்டதாரி ஆசிரியை உள்ளிட்டோர் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா கொடுத்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோமதி, உதவி ஆய்வாளர் ரபீனா மரியம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.