சென்னை: துபாயிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.3.91 கோடி மதிப்புடைய 6.168 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தின் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தங்கத்தைக் கடத்தி வந்த குருவி பயணிகள் 5 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும், தங்கத்தை கடத்தியவர்களிடம் நடத்திய விசாரணையில், சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலுக்காக இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
துபாயிலிருந்து சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள், மிகப்பெரிய அளவில் விமானத்தில் சென்னைக்கு தங்கம் கடத்தி வருவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையிலிருந்து ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (ஜூன் 6) இரவு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில், துபாயிலிருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நள்ளிரவில் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகளின் தனிப்படையினர் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர், சுற்றுலாப் பயணிகளாக துபாய்க்குச் சென்றுவிட்டு, இந்த விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்தனர். அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அவர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளனர்.