சென்னை: கடந்த சில நாட்களாகவே ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலை அவ்வப்போது குறையவும் செய்கின்றது. இருப்பினும் பெரிய அளவில் விலை குறைவதில்லை. ஆனால், அதிரடியாக ஏற்றம் காணும் தங்கம் விலை, குறையும் போது மிகவும் சொற்பமான அளவில் குறைவது மக்கள் மத்தியில் தங்கம் வாங்குவதில் குழப்பம் அடைகின்றனர்.
இந்திய மக்களை பொருத்தவரை தங்கம் என்பது ஆடம்பர ஆபரணமாக மட்டுமில்லாமல், மக்களின் சேமிப்பின் முக்கிய பொருளாகவும் அமைகிறது. ஆனால், தற்போது சாமானிய மக்களின் எட்டாக்கனியாகத் தங்கம் மாறி வரும் நிலையில், தற்போது தங்கத்தில் விலை சிறிதளவு குறைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையானது, மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 885க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.55 ஆயிரத்து 80க்கும் விற்பனையானது. இதனிடையே, வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் கிராமுக்கு வெறும் 40 ரூபாய் குறைந்துள்ளது.