திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி அய்யாசாமி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் சொந்தமாக ஆறு ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு 6 ஆடுகளையும் ஆட்டுக் கொட்டகையில் கட்டி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலையில் மணி வீட்டிலிருந்து ஆடுகளை அவிழ்த்து விடச் சென்றுள்ளார்.
அப்போது மூன்று ஆடுகள் மர்ம விலங்கு கடித்து ஆட்டுக்கொட்டகையிலேயே உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த பொழுது, இறந்த ஆடுகள் சிறுத்தை கடித்து உயிரிழந்து இருக்குமா என அச்சமடைந்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், வாணியம்பாடி அடுத்த தும்பேரி அண்ணாநகர் பகுதியில் இரண்டு ஆடுகள் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்துள்ளது. மேலும்ம் ஏற்கனவே கடந்த மாதம் திருப்பத்தூர் நகர் பகுதியில், சிறுத்தை புகுந்த நிலையில், அச்சிறுத்தை வனத்துறையினர் பிடித்து, வாணியம்பாடி அருகே உள்ள தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியான மாதகடப்பா வனப்பகுதியில் சிறுத்தையை விட்டனர்.