சென்னை:சென்னை தி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், இன்று (ஜூலை 26) தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமாகவின் 234 தொகுதியினை நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டதன் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்ட நிர்வாகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், “2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னேற்றத்திற்காக, தமாகாவை வலிமையாக மாற்றுவதற்கு அமைப்பு ரீதியாக மாவட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்திற்கு புதிய நிர்வாகிகள் பிரிக்கப்பட்ட பின் தற்போதுதான் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்ற ரீதியில் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணிகள் இந்த ஆண்டு துவங்கப்படும். அதற்கான கோட்பாடுகள் வகுக்கப்பட்டு வருகிறது, ஆகஸ்ட் 9ஆம் தேதி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்க திட்டமிட்டு உள்ளோம். இதற்குப் பின் 4 மண்டலங்களுக்குச் சென்று தொண்டர்களோடு தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து ஆலோசிக்க உள்ளோம்.
மேலும், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வருங்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் வளர்ச்சி அடைவதற்கு மத்திய நிதி அமைச்சர் வழிவகை செய்துள்ளார்.
இதில் விவசாயிகள், பெண்கள், மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வது என்றும் மற்றும் இந்தியாவின் உள்கட்டமைப்பு வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு 11.11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது வரவேற்கக் கூடியதாகும். மேலும், இந்தியாவின் வளர்ச்சி அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியது. எல்லா வருடத்திலும், எல்லா நிதிநிலை அறிக்கையிலும் அனைத்து மாநிலங்களின் பெயரை சொல்லிக் குறிப்பிடுவதில்லை.