கோயம்புத்தூர்:நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நீலகிரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நீலகிரி தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் நேற்று (திங்கட்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ஈடிவி பாரத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடியின் ஆட்சி சிறந்த நல்லாட்சியாக, உலகிற்கு வழிகாட்டும் ஆட்சியாக உள்ளது. மோடி ஆட்சியில், உலக நாடுகளுடன் போட்டிப் போடும் நாடாக இந்தியா உள்ளது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே பிரதமரின் ஒரே கொள்கை. அதனால் தான், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், குடிநீர் இணைப்பு திட்டம், கேஸ் இணைப்பு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.
நீலகிரி தொகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக மக்கள் பணி செய்து கொண்டிருக்கிறோம். இந்த தொகுதியில் பாஜக வெற்றி என்பது நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஒன்று. மக்கள் ஒவ்வொருவரும், மாற்றம் வர வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தேசியத்தையும், தெய்வீகத்தையும் நம்பும் மக்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ராசாவை புறக்கணிக்கத் தயாராக உள்ளனர்.
2014க்கு பிறகு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு இல்லை. எல்லை தாண்டி செல்லும் மீனவர்கள், இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்படுகிறார்கள் தான். ஆனால், அவர்களை உடனடியாகவும், பத்திரமாகவும் மீட்டு வருகிறோம். இந்த இக்கட்டான நிலைக்குக் காரணம், கச்சத்தீவைக் கொடுத்தது தான். ஆர்.டி.ஐ தகவல் வாங்கியதில் சதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தோல்வி அவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது.
காங்கிரஸ் மற்றும் திமுக சதி செய்து, நம்முடைய நாட்டின் ஒரு பகுதியை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யாமல், தாரை வார்த்துள்ளனர். பெரிய சதியானது நடந்துள்ளது. அதை இந்த ஆட்சியில் கண்டுபிடித்து உள்ளோம். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அவர்களுக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன், நீலகிரி தொகுதிக்கு என பல்வேறு திட்டங்களை வைத்துள்ளேன்.
நீலகிரியை சர்வதேச டூரிஸ்ட் சென்ட்ராக (Tourist Center) மாற்றுவதே என் முதல் குறிக்கோள். இதற்கு முன்னால் இருந்தவர்களுக்கு நீலகிரியைப் பற்றிய புரிதல் இல்லை. அதனால்தான், நீலகிரி மாவட்டம் முன்னேறவில்லை. நீலகிரியை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தளமாக மாற்றுவது தான் என்னுடைய பிரதான கொள்கை. மேட்டுப்பாளையத்தைச் சுற்றி, புறவழிச் சாலை அமைக்க வேண்டும்.
பாஜக-வுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ஆதரவு அலை உள்ளது. 'என் மண் என் மக்கள்' யாத்திரை, மக்களிடையே நீங்கா இடம் பிடித்துள்ளது. பிரதமரின் நலத்திட்டங்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்றுள்ளது. தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக, அதிமுக மக்களிடையே பெரிய அதிருப்தியைப் பெற்றுள்ளதால், பாஜகவுக்கு அதிக ஆதரவுள்ளது.
2047க்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவது தான் பாஜகவின் குறிக்கோள். கடந்த ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. சாதாரண மனிதனும் விமானத்தில் செல்ல வேண்டும், ரயில் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் எனத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கச்சத்தீவு என்ற 'சிறிய பாறை'-யை விட்டுத்தர தயங்க மாட்டோம்? - ஜெய்சங்கர் பரபரப்பு விளக்கம் - RTI Report Of Katchatheevu Issue