புதுச்சேரி: இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்தபடியாக நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாபடுவது விநாயகர் சதுர்த்தி. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சர்வதேச சுற்றுலா நகரமான புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணி முதல் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுது.
அதன் பிறகு விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு விநாயகர் தரிசித்து வருகின்றனர்.
மேலும் தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. மேலும், 20 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. இதற்காக 20 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் 4 மணிக்கு திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடக்கிறது. வண்ண வண்ண விளக்குகளாலும், பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கோயிலுக்கு வந்த பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும், பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது போன்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து விநாயகர் ஆலயங்களிலும் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.