சென்னை:நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை சக நண்பர்கள் சேர்ந்து, தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பியுள்ள சம்பவம் குன்றத்தூர் பகுதியில், மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த குன்றத்தூர் ஒண்டி காலனி, அக்னீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய் (29). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு விஜய் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள காலி இடத்தில் அமர்ந்து கொண்டு மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து கல்லை எடுத்து விஜயின் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சாய்ந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதையும் படிங்க:"திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்த சான்றிதழ்தான் அமைச்சர் மீதான சேறு வீச்சு" - வானதி சீனிவாசன் விளாசல்!
இதனை கண்ட அந்த பகுதி மக்கள் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு இறந்து போன விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ளவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் கொலைக்கான காரணம் குறித்தும், தலைமறைவாக உள்ள நான்கு கொலையாளிகளை தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், கொலையாளிகள் பிடிபட்டால் மட்டுமே கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் போதை பழக்கத்தால் இளைஞர்கள் பெரும்பாலும் தவறான பாதைகளில் சென்று குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மது ஒரு பக்கம் இருக்க, கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதை பொருட்களின் புழக்கமும் தமிழகத்தில் ஆங்காங்கே தலை தூக்கியுள்ளது. போதை பழக்கத்தில் இருந்த இளைஞர்கள் விடுபட வேண்டும் என்று தமிழக அரசும் விழிப்புணர்வு விளம்பரம் செய்து வருகிறது. இந்த நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துக்கொண்டிருந்த போதே வாய் தகராறு முற்றி கொலை வரை சென்றிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில், அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.