தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓய்வுக்கு சென்ற விமானி.. சென்னை விமான நிலையத்தில் 168 பயணிகள் தவிப்பு! - CHENNAI AIRPORT

பெங்களூருவில் மோசமான வானிலை நிலவியதால் சென்னையில் தரையிறங்கிய 4 விமானங்களில் 3 விமானங்கள் திரும்ப பெங்களூருக்கு சென்ற நிலையில், ஒரு விமானத்தின் விமானி பணிநேரம் முடிந்து ஓய்வுக்கு சென்றுவிட்டதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை விமான நிலையம், ஏர் இந்தியா விமானம் கோப்புப்படம்
சென்னை விமான நிலையம், ஏர் இந்தியா விமானம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2024, 7:46 PM IST

சென்னை :பெங்களூருவில் இன்று காலை மோசமான வானிலை நிலவியதால், பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக டெல்லி, மும்பை, மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் இருந்து வந்த 4 விமானங்கள் தரையிறங்க முடியாமல் சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த 4 விமானங்களும் சென்னை விமான நிலையத்தில் வந்து தரையிரங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர்ந்திருந்தனர்.

அதன் பின்பு இன்று காலை 9 மணிக்கு மேல் வானிலை சீரடைந்து விட்டது என்ற தகவல் வந்ததும், டெல்லி ஸ்பைஸ் ஜெட் விமானம், மும்பை ஆகாஷா விமானம் மற்றொரு மும்பை ஏர் இந்தியா விமானம் ஆகிய 3 விமானங்கள் பெங்களூருக்கு திரும்பி சென்றுவிட்டன.

ஆனால் அபுதாபியில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விமானி தனக்கு பணி நேரம் முடிந்து விட்டதாகக் கூறி ஓய்வுக்கு சென்று விட்டார். இதையடுத்து பெங்களூருவில் வானிலை சீரடைந்த பின்பும், இந்த அபுதாபி விமானம் பெங்களூருவுக்கு திரும்பி செல்ல முடியவில்லை. இதனால் அந்த விமானத்தில் இருந்த 168 பயணிகள் பல மணி நேரமாக விமானத்திற்குள்ளேயே தவித்ததால், பயணிகள் விமான பணிப்பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க :ஒரே நாளில் 9 விமானங்கள் ரத்து! என்ன காரணம்?

அதன் பின்பு சென்னை விமான நிலைய அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று 168 பயணிகளையும் விமானத்திலிருந்து கீழே இறக்கி சென்னை விமான நிலையத்திலேயே சுங்கச் சோதனை, குடியுரிமைச் சோதனை போன்றவைகளை நடத்தி முடித்தனர்.

பின்னர் அந்தப் பயணிகள் சென்னை நகரில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பயணிகள் பெங்களூரு செல்லும் வேறு விமானங்களிலோ அல்லது விமானி ஓய்வு முடித்துவிட்டு மாலையில் வந்த பின்பு அதே விமானத்திலேயே பெங்களூரு-க்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details