சென்னை:பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விழுப்புரம் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த வழக்கில் ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ராஜேஷ் தாஸின் மனைவியும், தமிழக எரிசக்தி துறைச் செயலருமான ஐஏஎஸ் அதிகாரி பீலா, சென்னை கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் பண்ணை பங்களாவில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது பங்களா வீட்டிற்கு கடந்த மே 21ஆம் தேதி அவரது முன்னாள் கணவரும், முன்னாள் சிறப்பு டிஜிபியுமான ராஜேஷ் தாஸ் அத்துமீறி நுழைந்து காவலாளிகளை தாக்கி தகராறில் ஈடுபட்டதாக, பீலா கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் கேளம்பாக்கம் போலீசார் ராஜேஷ் தாஸ் மீது அத்துமீறி புகுந்து பிரச்னை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இன்று அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து நான்கு மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.