மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து, நாகை மாவட்ட வன உயிரினக் காப்பாளர் அபிஷேக் தோமர் அளித்த செய்திக் குறிப்பில், "சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் வீரசோழனாறு, நண்டலாறு மற்றும் மகிமலையாறு பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (ஏப்.8) காஞ்சிவாய் கிராமத்தின் அருகிலுள்ள நண்டலாற்றின் நடுவில் சிறுத்தையின் காலடித்தடம் சிறப்புக் குழுவினரால் கண்டறியப்பட்டது.
அத்தகவலை அடுத்து வனத்துறை அலுவலர்கள், வனக்கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழு உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த இடத்திலிருந்து தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதி அருகில் இருப்பதால், தஞ்சாவூர் வனக்கோட்டத்தைச் சேர்ந்த வனப்பணியாளர்களும், காஞ்சிவாய் கிராமப் பகுதிக்கு வந்து களக்குழுவுடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
சிறுத்தையின் நடமாட்டம் பெரும்பாலும் ஆறு மற்றும் ஓடைகள் வழியாகவே இருப்பதாலும், அப்பகுதிகளில் உள்ள சிறிய மதகுகள், சிறு ஓடைகள், சிறு பாலங்கள், ஓடையில் உள்ள புதர்கள் ஆகிய இடங்களில் பகல் நேரங்களில் சிறுத்தை பதுங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாலும், நீர்வளத்துறை அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களின் உதவியுடன் நீர்வழிப் பாதைகளில் வரைபடங்களை ஆய்வு செய்தும் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடனும் சிறுத்தை இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ள இடங்களைக் கண்டறிந்து, அவ்விடங்களில் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையில், நண்டலாறு மற்றும் வீரசோழனாறு பகுதிகளில் சரியான இடங்களைக் கண்டறிந்து சிறுத்தை பிடிக்கும் கூண்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டு 6 இடங்களில் வைக்கப்பட்டது. இது தவிர, 25 தானியங்கி கேமராக்களும் ஆறுகளிலும், ஓடைகளிலும், சிற்றோடைகளிலும் பொருத்தப்பட்டன. அத்துடன் சிறுத்தை ஏற்கனவே கண்டறியப்பட்ட மயிலாடுதுறை அருகே உள்ள காவேரி ஆறு ஒட்டிய பகுதிகளிலும் 19 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
மேலும், வனத்துறையின் மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சிறுத்தையின் நடமாட்டம் குறித்தும், சிறுத்தையின் பொதுவான குணங்கள் குறித்தும் அறிவுரைகளும், விழிப்புணர்வுகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாமென்றும், இரவு நேரங்களில் அவர்களின் நடமாட்டத்தை குறைத்துக் கொள்ளுமாறும், குறிப்பாக, 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோரை வெளியில் தனியாக விட வேண்டாம் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் இன்று (ஏப்.9) காலை காஞ்சிவாய் அடுத்த கருப்பூர் அருகில் உள்ள நண்டலாற்றின் அருகில் சிறுத்தையின் எச்சம் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனடிப்படையில், சிறுத்தையின் இடப்பெயர்ச்சி எவ்வாறு செல்கிறது, அதன் போக்கு எவ்வாறு உள்ளது என்பது குறித்தும், வனத்துறை அலுவலர்கள், வன உயிரின ஆர்வலர்கள், நிபுணர்கள் கலந்தாலோசித்தும் வரைபடங்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொண்டும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தருமபுரம் ஆதீனம் விவகாரம்; "பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" - உயர் நீதிமன்றத்தில் காவல்துறை வாதம்! - Dharmapuram Adheenam Case