ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கேர்மாளம் வனப்பகுதியில் வனத்துறையினருடன் மாவோயிஸ்ட் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாசக்குட்டை பகுதியில் தந்தம் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், போலீசார் பாசக்குட்டை இடத்திற்கு மாறுவேடத்தில் சென்றனர்.
தந்தம் வாங்கும் வியாபாரிகள் போலச் சென்ற மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீசார், பாசக்குட்டையைச் சேர்ந்த நபரிடம் விலைக்கு தந்தம் கேட்டுள்ளனர். அந்த நபர் மற்றொரு நபரிடம் அறிமுகப்படுத்திய போது வந்திருப்பது போலீசார் என சந்தேகமடைந்த நபர் தந்தம் விற்பனை செய்வதில்லை என மழுப்பி உள்ளார்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பாசக்குட்டை வனத்தில் ஒரு ஜோடி யானை தந்தத்தை மண்ணில் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில், போலீசார் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று தோண்டிய போது ஐந்தரை அடி நீளமுள்ள இரு யானை தந்தங்களைக் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.