வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை (Video Credit - ETV Bharat Tamil Nadu) திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள வேம்பையாபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர், அவரது வீட்டில் கட்டிப்போட்டிருந்த ஆட்டை கடந்த வியாழக்கிழமை இரவு வனப்பகுதியில் இருந்து இறங்கிய சிறுத்தை வேட்டையாடி தூக்கி சென்றதாகக் கூறப்பட்டது. அதேபோல, பாபநாசம் அருகேயுள்ள அனவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் வீட்டிலிருந்த ஆட்டையும் சிறுத்தை தாக்கியது.
அதனைத் தொடர்ந்து, சங்கர் ஆட்டை தூக்கிச் சென்ற சிறுத்தை, அவரது வீட்டில் இருந்து வெகுதூரத்தில் உள்ள மலைப்பகுதியில் பாதி உடலை கடித்து குதறிய நிலையில் போட்டுவிட்டு சென்றிருந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் வனச்சரகர் சத்தியவேல் தலைமையிலான வனத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும், இரு பகுதிகளிலும் வனத்துறையினரின் மோப்ப நாயான நெஸ் (NEX) மூலமாக மோப்பம் பிடித்து சிறுத்தை வந்த வழியாக பின்தொடர்ந்து சென்றனர்.
இறுதியாக அனவன்குடியிருப்பு பகுதியில் நாய் மோப்பம் பிடித்தபோது, அது அப்பகுதியிலுள்ள பொத்தை பகுதியைச் சென்றடைந்தது. அடுத்த கட்டமாக அந்தப் பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத் துறையினர் திட்டமிட்டனர். அதன்படி மோப்ப நாய் அடையாளம் காட்டிய இடத்தில் சிறுத்தையை பிடிக்க நேற்று கூண்டு வைக்கப்பட்டது. மேலும், துறை இணை இயக்குநர் இளையராஜா மற்றும் வனச்சரகர் சத்தியவேல் தலைமையில் வனக்குழுவினர் அங்கு முகாமிட்டு சிறுத்தையை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை வசமாக சிக்கியது. இதையடுத்து இந்த சிறுத்தை பாதுகாப்பாக அங்கிருந்து வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, அடர்ந்த வனப் பகுதிக்குள் விடப்பட உள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை சுற்றுவட்டாரப் பகுதியில் ஆடுகளை கடித்துக் குதறி மனிதர்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லையை மீண்டும் மிரட்டுகிறதா வானிலை?.. திடீரென வந்திறங்கிய பேரிடர் மீட்பு குழு - காரணம் என்ன?