தூத்துக்குடி:விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த பாண்டி என்ற ஓட்டுநர் தனது சுற்றுலா பேருந்தில் சிவகாசியைச் சேர்ந்த 60 பக்தர்களை அழைத்துக் கொண்டு நேற்று இரவு 8 மணி அளவில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்துள்ளார். இரவு நேரம் என்பதால் திருச்செந்தூர் அய்யா கோயில் அருகே கடற்கரை மணலில் பேருந்து சிக்கி உள்ளது. உடன் வந்த பக்தர்கள் அனைவரும், மணலில் சிக்கிய பேருந்தை நீண்ட நேரம் போராடி மீட்க முயன்றனர் ஆனாலும் மீட்க முடியவில்லை.
இதனால் பக்தர்கள் அனைவரும் கோயிலில் இரவு தங்கி, அதிகாலை தரிசனத்தை முடித்து விட்டு, பின் பேருந்தை வெளியே எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்து சென்று விட்டனர். அதன்படி காலையில் தரிசனத்தை முடித்து வந்த பக்தர்கள், மீண்டும் பேருந்தை வெளியே எடுக்க முயன்றும், முடியாததால் திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை சந்தித்து மீனவர்கள் கடலில் இருந்து படகை இழுக்கும் டிராக்டர் மூலம் பேருந்தை வெளியே எடுக்க உதவி கேட்டனர்.
ஆனால் கடலில் இருந்து வரும் படகுகள் அனைத்தையும் மதியத்திற்கு மேல் தான் வெளியே கொண்டு வருவோம் என்று கூறிய மீனவர்கள், மதியம் இரண்டு மணியளவில், கடற்கரை பகுதியில் சிக்கி இருந்த பேருந்தை, தங்களின் டிராக்டர் மூலம் போராடி வெளியே எடுத்தனர். மாலை 3.30 மணி அளவில் பேருந்து வெளியே எடுக்கப்பட்ட பின்னர், பக்தர்கள் அனைவரும் அந்த பேருந்தில் ஏறி சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.