திருச்சி: ஶ்ரீரங்கம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் ஆற்றின் மணல் வெளி மற்றும் தடுப்பு கட்டைகள் மீது அந்த பகுதியைச் சார்ந்த பலர் ஆறு வறண்டு இருப்பதால் அங்கே இரவு நேரத்தில் உறங்குவது வழக்கம். இந்நிலையில் ஆற்றின் குறுக்கே மேம்பாலத்தின் தூண் பகுதியின் கீழ் உள்ள சிமெண்ட் கட்டையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது முக்கொம்பு அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் இரண்டு கரைகளையும் தொட்டுக் கொண்டு ஓட தொடங்கியது. இந்நிலையில் உரங்கிய நபர் விழித்துப் பார்த்தவுடன் தண்ணீர் சூழ்ந்ததால் அவரால் கரைக்கு வர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார். பின்னர் பாலத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நபர் ஒருவர் இதனைக்கண்டு தீயணைப்புத்துறைக்குத் தகவல் அளித்தார்.
ஆற்றின் நடுவே சிக்கிக்கொண்ட நபரை, மேம்பாலத்தின் மேற்பகுதியில் இருந்து கயிறு மூலம் தீயணைப்பு படை வீரர் ஒருவரை ஆற்றுக்குள் இறக்கி மற்றொரு கயிறு மூலம் ஆற்று வெள்ளத்தின் நடுவே சிக்கிக்கொண்டு இருந்த நபரை, திருச்சி ஸ்ரீரங்கம் தீயணைப்பு மீட்பு துறையினர் மீட்டு மேலே கொண்டு வந்தனர்