சென்னை:கொட்டிவாக்கம் கடற்கரையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக்கொண்டு மீனவ மக்களுக்கு பாஜக உறுப்பினர் சேர்க்கைக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, "பிரதமர் நரேந்திர மோடி மீனவர்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மீனவர்களுக்கான தனி அமைச்சகம் வந்தது பாஜக ஆட்சியில் தான். தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும். அதற்கான பணிகள் 6 ஆண்டுகளாக பெரிய அளவில் நடக்கிறது. சில குடும்பங்களுக்கு மட்டும் பதவி என்பது பாஜகவில் இருக்காது. எளியவரும் பெரிய தலைவர் ஆகலாம்.
இதையும் படிங்க:நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டதா? நடந்தது என்ன? பரபரப்பு பின்னணி!
மிகப் பெரிய கட்சி என்றால் அது பாஜகதான். ஜாதி, மதம், ஏற்றம், தாழ்வு, சிறியவர், பெரியவர், தாழ்ந்தவர், உயர்ந்தவர் என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் கட்சி பாஜக.
திமுகவில் மகன், மருமகன் உள்ளிட்டோருக்கு மட்டுமே தலைவர் பதவி கிடைக்கும். ஆனால் பாஜகவில் திறமை உள்ளவர்களும் பெரிய பதவிகளுக்கு வர முடியும். பாரதிய ஜனதா கட்சி கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். பெரிய கட்சி என்பது எத்தனை பேர் அதை நம்பி இணைகிறார்களோ அதை பொறுத்தது தான் சொல்ல வேண்டும்.
மீனவர்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தினால், அவர்களுக்க 3 மடங்கு லாபம் கிடைக்கும். எதிர்கட்சிகள் ஏழை மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பிரசாரம் செய்கின்றனர். நாங்கள் பாரம்பரிய மீனவர்களின் அதிகாரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கிறோம். 5ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்கும் திட்டம் தான் கல்விக் கொள்கையில் இருக்கிறது. எனவே, இந்தியை யாரும் திணிக்கவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.