மதுரை: தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார். விழாவில் பேசிய தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “இங்கு நான் ஆளுநராக வந்திருக்கிறேன் என்று சொல்வதை விட, உங்களின் சகோதரியாக வந்திருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
குடியரசு தின விழாவில் இரண்டு மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றிய பெருமை உங்கள் சகோதரியாகிய எனக்குத் தான் உண்டு. காலையில் தெலுங்கானாவில் கொடியேற்றிவிட்டு, விமானத்தின் மூலம் புதுச்சேரி சென்று அங்கும் கொடியேற்றிவிட்டு, அதன்பின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அழைத்து "அட் ஹோம்" நிகழ்ச்சியில் தேநீர் விருந்து கொடுக்க வேண்டும். அந்த ஆளுநர் தேநீர் விருந்துக்கு வரவில்லை என்று சொல்வதை கூட ஒரு சில கட்சிகள் பெருமையாக சொல்லி கொள்கின்றன.
தெலுங்கானாவில் கொடியேற்றிவிட்டு புதுவை வந்து அங்குள்ள முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு மாலை 4 மணிக்கு தேநீர் விருந்து கொடுத்துவிட்டு, மீண்டும் தெலுங்கானாவில் அமைச்சர்களுக்கு விருந்து கொடுத்தேன். அதனை தொடர்ந்து, இன்று காலை தெலுங்கானாவில் இரண்டு மாநாடுகளில் கலந்து கொண்டு, மாலை உங்களுக்கான இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
ஆகவே, இரண்டு மாநிலத்தின் கொடியேற்றியது மட்டுமல்ல, இரண்டு மாநில முதலமைச்சர்களையும் அழைத்து தேநீர் விருந்து அளித்த முதல் ஆளுநர் என்ற பெருமையையும் உங்கள் சகோதரியாகிய எனக்கு மட்டும் தான் உள்ளது. ஏனென்றால், இதற்கு முன்பு மூன்று ஆண்டுகளாக தெலுங்கானா முதலமைச்சர் தேநீர் விருந்துக்கு வரவில்லை.