சென்னை: முல்லைப் பெரியாறு அணை குறித்து பொய் பிரச்சாரம் மேற்கொள்பவர்களை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தென் தமிழக மக்களின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை இன்றைக்கும் வலுவாக இருப்பதற்கு காரணம், அணை புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. பொதுவாக புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்படும் அணைகள் சக்தி வாய்ந்தவை.
இப்படிப்பட்ட புவி ஈர்ப்பு அடிப்படையில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை இன்றளவும் உறுதியாகவும், வலிமை மிக்கதாகவும் விளங்குகிறது. இது மட்டுமல்லாமல் குறுகிய கால திட்டமாக, அணையின் எடையை அதிகரிக்கும் பொருட்டு 21 அடி அகலத்திற்கு, மூன்று அடி பருமன் கொண்ட ஆர்.சி.சி கட்டுமானப் பணி அணையின் முழு நீளத்திற்கு அதன் மேற்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடுத்தர கால நடவடிக்கையாக, இறுக்கு விசை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அணையின் அடித்தளத்துடன் எஃகு கம்பிகள் இழுத்துக் கட்டப்பட்டுள்ளன. நீண்ட கால நடவடிக்கையாக, அணையின் பின்புறத்தில் 10 அடி ஆழம், 32 அடி அகலத்திற்கு தரை மட்டத்திலிருந்து 145 அடி உயரத்திற்கு ஆர்.சி.சி கட்டுமானம் அணையின் தலைப் பகுதியுடன் இணையும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தற்போதுள்ள அணை மற்றும் புதிய கட்டுமானம் ஆகியவை ஒரே அணை போல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
முல்லை பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்து 10 ஆண்டுகள் கடந்தும், வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவிடாமல் கேரள அரசு தடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தற்போது வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவினை ஒப்பிட்டு சில சுயநலவாதிகள் சமூக வலைத்தளங்களில் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், முல்லை பெரியாறு அணையில், புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு தொடருவதாக கேரள மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.