கரூர்: கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தோரணக்கல்பட்டி பகுதியில், அதிமுக கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், கரூர் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் இன்று(ஏப்.3) இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கரூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பேசுவது என்றே தெரியாமல் தோல்வி பயத்தில் பேசி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளைக் கூறி வாக்கு கேட்க முடியாதவர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அமாவாசைகளில் ஆட்சி தூக்கி எறியப்படும்: கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் தமிழகம் எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பதைப் பட்டியலிட்டு அதிமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். தமிழகத்தில் திறமையற்ற பொம்மை முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு 36 அமாவாசைகள் கடந்து விட்டது. மீதமுள்ள 24 அமாவாசைகளில், இந்த ஆட்சி தூக்கி எறியப்படும். அதற்கான முன்னோட்டமாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியைக் காப்பாற்றுவதற்கு அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்குக் கரூர் தொகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும். திமுக ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் தமிழகம் முன்னோக்கிச் சென்றது.
திமுக ஊழல் ஆட்சி: தமிழகத்தில் ஊழல் இல்லாத துறையே கிடையாது. ஊழல் நிறைந்த ஆட்சி தான் திமுக ஆட்சி. திமுக ஆட்சிக்கு வந்தாலே ஊழல் அதிகரித்து விடும். இந்திய அளவில் இதற்கு முன்னர் ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே ஒரு அரசு திமுக அரசு மட்டுமே.
அதிமுகவினர் மீது வழக்குப் போடும் திமுக: கரூர் மாவட்டத்தில் மட்டும் அதிமுகவினர் மீது அதிக வழக்குகளை திமுக அரசு காவல்துறையை வைத்துப் பதிவு செய்துள்ளது. சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். எதற்கும் அஞ்ச வேண்டாம்.
நீங்கள் எத்தனை வழக்குகள் அதிமுகவினர் மீது போட்டாலும் அதனை நாங்கள் சந்திக்கத் தயார். நான்கு வருடங்கள் 2 மாதங்கள் ஆட்சி நடத்திய அதிமுக அரசு நினைத்திருந்தால், திமுகவினர் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்திருப்போம். ஆனால் அதிமுக அரசு மக்களுக்காகச் சிந்தித்துச் செயல்பட்டது.