தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"எல்லாருக்கும் தேங்க்ஸ்..” சிகிச்சை முடிந்து காட்டுக்குள் சென்ற பெண் யானை! - Female Elephant treatment

Female elephant: கோவை மருதமலை பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை 100 மணி நேர சிகிச்சைக்குப் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. வனத்துறை மேற்கொண்ட முயற்சிக்கு சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சிகிச்சை பின் வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானை
சிகிச்சை பின் வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 12:04 PM IST

கோயம்புத்தூர்:கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மருதமலை அடிவாரப் பகுதியில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வனத்துறை பணியாளர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெண் யானை ஒன்று குட்டியுடன் படுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பின் வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானை (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், பெண் யானை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும், குட்டி யானை அருகில் இருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மாவட்ட வன அலுவலர் தலைமையில், கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் சுகுமார், ராஜேஷ் ஆகியோர் வனப்பணியாவார்கள் உதவியுடன் தாய் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், தண்ணீர் மற்றும் பழங்களும் அதனுடன் மருந்து வைத்து அந்த யானைக்கு வழங்கப்பட்டது.

வனத்துறையினர் சிகிச்சை அளித்த போது உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய் யானைக்கு அருகிலேயே குட்டி யானை பரிதவிப்புடன் நின்று கொண்டிருந்தது. தாய் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, கிரேன் மூலம் யானை நிற்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே, மூன்று நாட்களாக அந்த யானையுடன் இருந்த மூன்று மாதமான குட்டி ஆண் யானை, அப்பகுதியில் இருந்த ஒரு யானைக் கூட்டத்துடன் இணைந்து காட்டிற்குள் சென்றது. கூட்டத்துடன் இணைந்து குட்டி யானை நல்ல முறையில் இருப்பதாகவும், அந்த யானையை ட்ரோன் மூலமும், 25 களப் பணியாளர்களை நான்கு தனிக் குழுக்கள் அமைத்தும் அதன் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிகிச்சை பெறும் தாய் யானையை, ஒரு யானைக்கூட்டத்துடன் வந்த குட்டி யானை சந்தித்து விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர். நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய பெண் யானை நலமுடனும், சுறுசுறுப்பாகவும் இருந்ததோடு, நன்றாக உணவருந்தி வந்தது.

இதனால் இன்று காலை கிரேனில் இருந்து அந்த பெண் யானையை வனத்துறையினர் விடுவித்தனர். பின்னர், அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, குட்டி யானையுடன் அந்த யானையை சேர்த்து வைக்கவும் வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். தற்போது யானை மடுவு என்ற இடத்தில் அதன் குட்டி யானை உள்ளதால், அதனை நோக்கி தாய் யானை சென்று கொண்டிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:குடும்பத் தகராறில் 3 வயது மகனை ஏரியில் வீசிய தந்தை.. சென்னையில் நடந்த கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details