தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"வந்து பாருங்கள் மோதி பார்க்கலாம்” - பட்டாசு தொழிலை காக்க திமுக குரல் கொடுக்கவில்லை என சிவகாசியில் ஈபிஎஸ் பேச்சு! - EPS in Sivakasi - EPS IN SIVAKASI

AIADMK General Secretary EPS campaigned in Virudhunagar: திமுக அரசு பட்டாசு தொழிலைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை எனவும், திமுகவின் 38 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் எந்த குரலும் கொடுக்கவில்லை என சிவகாசியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

aiadmk-general-secretary-eps-campaigned-in-virudhunagar-in-support-of-dmdk-candidate-vijaya-prabhakaran
"சிவகாசி பட்டாசு தொழிலைக் காக்க திமுகவின் 38 எம்பிக்களும் ஏதும் செய்யவில்லை" - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 9:00 PM IST

விருதுநகர்: விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து, சிவகாசி பாவாடிதோப்பு திடலில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, முரசு சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சியினர், அதிமுக ஆதரவு அமைப்பு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக வரவேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "எந்த சேனலைத் திறந்து பார்த்தாலும் எடப்பாடியைப் பற்றி தான் பேச்சு. கன்னியாகுமரி முதல் டெல்லி வரை எடப்பாடி பழனிசாமியைப் பற்றிதான் பேசுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி பின்னால் 2 கோடி தொண்டர்கள் உள்ளனர். மேலும், எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு எழுச்சியாக தொண்டர்கள், பொதுமக்கள் வருகிறார்கள்" என பேசினார்.

பின்னர் பேசிய விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர், "எனக்காக பிரச்சாரம் செய்ய வந்த வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி. நான் அரசியலுக்கு வருவேன் என்று தெரியும். ஆனால், இவ்வளவு சீக்கிரமாக வருவேன் என தெரியாது. நான் சென்னைக்காரன் என விமர்சனம் செய்கிறார்கள். நான் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரன். இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி. அதிமுக - தேமுதிக கூட்டணி தொடரும். 2018-இல் எனது அப்பா பேசிய இடத்தில் நான் இப்போது பேசுகிறேன். முரசு சின்னத்தில் எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தால், உங்களது குரலாக டெல்லியில் ஒலிப்பேன்" என பேசினார்.

பின்னர் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தனது வாழ்நாளை மக்களுக்காக அர்ப்பணித்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. நாட்டு மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் நமது தலைவர்கள். வீட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர் கருணாநிதி.

நமது வேட்பாளர்களை விட, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். திமுக சீட் கொடுத்து கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அழ வைக்கிறார்கள். திமுகவில் கூட்டணி வைப்பவர்களை திமுக வளர விடாது. நம்மிடம் கூட்டணி வைத்தால், நாம் கை தூக்கி வளர்த்து விடுவோம். ஸ்டாலினுக்கு தூக்கம் போச்சு. எங்கு பார்த்தாலும் என்னைப் பற்றியே பேசுகிறார். திமுக கட்சிக்காரர்கள் என்ன என்ன அட்டூழியம் செய்கிறார்கள் என ஸ்டாலினே கூறுகிறார். அதிமுக ஆட்சியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்குத் தேவையானதைச் செய்யும்.

திமுக அரசு பட்டாசு தொழிலைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை. திமுகவின் 38 எம்பி-க்கள் நாடாளுமன்றத்தில் எந்த குரலும் கொடுக்கவில்லை. 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் பட்டாசு தொழிலுக்கு அழுத்தம் கொடுப்போம். சட்டத்திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு தொழில் நசுங்கி போச்சு. இந்த நிலையில் ஸ்டாலின், நலமா என கேட்கிறார். திமுக ஆட்சியிலிருந்தால் யாராவது நலமாக இருக்க முடியுமா?

மேலும், நேற்று (மார்ச் 27) விருதுநகரில் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் என்னைப் பற்றி பேசியுள்ளார். இரட்டை வேடும் போடும் கட்சி திமுக. நாங்கள் கொடுத்த புகாரை ஆளுநர் விசாரித்து இருந்திருந்தால், நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வந்திருக்கும். 2026 வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. திமுக அவ்வளவு ஊழல் செய்திருக்கிறது.

எனக்கு முதுகெலும்பு இல்லை என ஸ்டாலின் கூறுகிறார். எனக்கா முதலெலும்பு இல்லை, வந்து பாருங்கள் மோதி பார்க்கலாம். ஸ்டாலின் அவர்களே, பேச்சுக்கு ஒரு எல்லை உண்டு. அதிமுக தொண்டர்கள் பதிலடி கொடுத்தால் அவ்வளவு தான். நான் எதையும் செய்யத் தயார். எனது ஆட்சியில் மக்கள் பணி செய்ய வேண்டும் என்று இருந்தேன் நான் வழக்கு போட்டிருந்தால் எத்தனையோ வழக்கு போட்டிருக்கலாம். மக்கள் பணி செய்ய வேண்டும் என ஆட்சி செய்தேன். திமுகவோ, அதிமுக தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுகிறது. திமுகவில் பல அமைச்சர்கள் நீதிமன்றம் ஏறி இறங்கி வருகிறார்கள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:நீதிமன்றங்களில் பயன்படுத்தும் முத்திரைத்தாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தாரா அண்ணாமலை? - மாவட்ட நிர்வாகம் விளக்கம்! - BJP Candidate Annamalai Nomination

ABOUT THE AUTHOR

...view details