சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(பிப்.19) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் மகளிர், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "இந்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்களே உள்ளன. வளர்ச்சித் திட்டம் எதுவுமே இல்லை. அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமை இல்லம் திட்டத்தை திமுக நிறுத்திவிட்டது. மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் 3 ஆண்டுகளாகச் சரிசெய்யப்படவில்லை. இப்போதுதான் நிதி ஒதுக்கி உள்ளனர். வழக்கம் போல இந்த ஆண்டும் பட்ஜெட்டில் அனைத்து துறைக்கும் குறிப்பிட்ட நிதியை ஒதுக்கி உள்ளனர். பட்ஜெட்டில் அது மட்டுமே உள்ளது. 8 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளனர். நாங்கள் தமிழகத்தைக் கடனாளி ஆக்கி விட்டோம் என்று குற்றம் சாட்டினர்.
இப்போது 8.33 லட்சம் கோடிக்கு மேல் தமிழகத்தின் கடன் உயர்ந்துள்ளது. இந்த ஆட்சி அமைந்தவுடன் கடன்களை மேலாண்மை செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைத்தனர். ஆனால், அந்தக் குழுவைத் தேடி கண்டுபிடிக்க இப்போது ஒரு குழுவை அமைக்க வேண்டும் போல. அந்த நிலைமையில்தான் உள்ளது. எங்களுக்கு நிதிநிலை புத்தகம் கொடுக்கப்படவில்லை. கணினியில்தான் பார்த்தோம். நிதிநிலை அறிக்கையில் பல குளறுபடிகள் உள்ளன. அதுகுறித்து அறிக்கை வெளியிடப்படும்.
தேன் கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். இரண்டுமே உழைத்தவர்களுக்குப் பயன் தருவதில்லை. இந்த பட்ஜெட் ஒரு கனவு பட்ஜெட். கானல் நீர் போல மக்களுக்கு எந்த பயனும் தராது. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் 1 தமிழகம் தான். எங்கள் ஆட்சியை விட தற்போதைய ஆட்சிக்கு வருவாய் அதிகமாக உள்ளது. GST பகிர்வு, பத்திரப் பதிவு உள்ளிட்டவற்றின் மூலம் தற்போது அதிக வருவாய் வருகிறது. ஆனாலும் எந்த பெரிய திட்டத்தையும் இவர்கள் அறிவிக்கவில்லை. எங்கள் ஆட்சியில் வருவாய் குறைவாக இருந்தாலும் பல திட்டங்களைக் கொண்டு வந்தோம்.
எங்கள் திட்டங்களை நிறுத்திவிட்டு, தற்போது அவற்றின் பெயரை மாற்றி மாணவர்களுக்கான உயர் கல்வித் திட்டங்களை அந்த நிதியை எடுத்து புதிதாகக் கொடுப்பது போலக் கொடுக்கின்றனர். புதிய பேருந்து குறித்த அறிவிப்பை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இவர்கள் சொல்வார்களே தவிர வாங்க மாட்டார்கள். அடுத்த ஆண்டும் இப்படி ஏட்டளவில் தான் இருக்கும். இப்போது போலவே எங்கள் ஆட்சியிலும் மத்தியில் இருப்போர் குறைவாகவே வரி பகிர்வைக் கொடுத்தனர். எங்களுக்கு மட்டும் அள்ளியா கொடுத்தனர்? மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலைமை.
தொழில் முதலீடுகள் நடைமுறைக்கு வந்தால்தான் பயனளிக்கும். நாங்கள் போட்ட ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்தது. இந்த ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் எத்தனை நடைமுறைக்கு வந்தது? ஏன் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. திமுகவினர் பெயர் வைப்பதில் மட்டுமே வல்லவர்கள். எங்கள் திட்டப் பெயரை மாற்றி இவர்கள் புது திட்டமாக அறிவிக்கின்றனர். கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்ற திமுக தேர்தல் அறிக்கை தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தை போல ஆகிவிட்டது. இப்போது அறிவித்துள்ள கல்விக்கடன்களை எந்த வங்கியில் வாங்கி தருவீர்கள்.? உங்கள் ஆட்சியில் எவ்வளவு கல்விக் கடன் இதுவரை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க:புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள்: காவிரி முதல் வைகை வரை பட்ஜெட்டில் அறிவிப்புகள்!