சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பேச ஆரம்பித்தபோது சபாநாயகர் அனுமதி கொடுக்க மறுத்த நிலையில், உதயகுமார் மீண்டும் அனுமதி கேட்ட நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, "நெஞ்சை பதற வைக்கின்ற சம்பவம், நாட்டையே உலுக்கி கொண்டிருக்கின்ற சம்பவம், மக்கள் தவித்து கொண்டிருக்கின்ற இந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு கேட்டோம். ஆனால், சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.
சட்டப்பேரவையில் பேச அனுமதி இல்லை என்றால், சட்டமன்ற உறுப்பினராக இருந்து எந்த ஒரு பயனும் இல்லை. தவறுகளை சுட்டிக்காட்டுவதுதான் எங்களது தலையாய கடமை. கள்ளச்சாராயம் மரணம் குறித்து பேசுவதற்கு எழுந்து அனுமதி கேட்டோம். சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை.
சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை - ஈபிஎஸ்:எங்களை வழுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டனர்; சட்டப்பேரவையில் நியாயம் கிடைக்கவில்லை. சபாநாயகர் நடுநிலையாக செயல்பட்டு இருக்க வேண்டும். கிட்டத்தட்ட 50 உயிர்களை இழந்திருக்கிறோம். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார் அனுமதி கேட்டதற்கு கைது செய்யும் அளவிற்கு கொடுமை நடந்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதை ஒழிப்பு குறித்து அடிக்கடி கூட்டம் போட்டு பேசிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், ஏன் இப்படி நடக்கிறது? என்று தெரியவில்லை. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் இருக்கும் பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்கு சுமார் 200 மீ தொலைவில் மட்டுமே உள்ளது. தொடர்ந்து மூன்று வருடமாக கள்ளச்சாராயம் அந்த பகுதியில் விற்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்: முதலமைச்சர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தை பொறுப்பேற்று உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை கொடுக்கவில்லை, போதிய மருத்துவர்கள் இல்லை, போதிய மருந்துகள் இல்லை. போதிய மருந்துகள் இல்லவே இல்லை. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அனைத்து மருந்துகளும் இங்கே உள்ளது என்று பொய் சொல்கிறார்.