தூத்துக்குடி: அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் தந்தை செல்லையா (98), கடந்த ஜூலை 25ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக காலமானார். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடம்பூர் ராஜூவின் இல்லத்திற்கு சென்று, அவரது தந்தை செல்லையாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர், வாகைகுளம் விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுவிட்டது. கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று கடலூரில் நவநீதன் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடக்காத நாளே கிடையாது. ஜனவரி 1 முதல் 595 கொலைகள் நடந்துள்ளது. தமிழகம் கொலை மாநிலமாக மாறி உள்ளது வேதனை அளிக்கிறது.
நேற்று தருமபுரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிரியாணி கடை ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். திமுக அரசு காவல்துறையை ஏவல் துறையாக மாற்றி வைத்திருக்கிறது. கஞ்சா போதையில் ஏற்படுகின்ற கொலைகள் அதிகமாக பார்க்கப்படுகின்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் படுகொலை, திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் ஆகிய அரசியல் கட்சி பிரமுகர்கள் கொலை செய்யப்படுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது.
மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான நிதி கொடுக்கப்படவில்லை என்று தமிழக அரசு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், 13 ஆண்டுகள் திமுகவைச் சேர்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அமைச்சராக இருந்தார்கள். அப்போது எவ்வளவு நிதி தமிழகத்திற்கு கொண்டு வந்தார்கள்? எவ்வளவு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்பதை கூற வேண்டும்.