திருச்சி:நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டும் 40 வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "இந்த தேர்தலில் மூன்று பிராதான கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார்கள். தேர்தலில் போட்டி என வரும்போது அது (AIADMK vs DMK) அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான்.
திமுக ஆட்சியில் மூன்றாண்டுகளில் எதுவும் செய்யவில்லை. ஆனால், பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. அதேபோல, 6 சட்டக்கல்லூரிகள் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டன.
தமிழ்நாட்டை 'கல்வியில் சிறந்த மாநிலம்' எனப் பெயர் எடுக்க வைத்தோம். உதயநிதி ஸ்டாலின் செங்கலை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும்; சாலையில் காட்டக் கூடாது. கதையை மாற்ற வேண்டும். 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியைப் பெற்று எய்ம்ஸ் (Madurai AIIMS) கட்டியிருக்கலாம்; ஆனால், அதைக் கேட்கத் திராணி இல்லை.
நீட் தேர்வைக் கொண்டு வந்தது யார்? என்பது குறித்து விவாதிப்போம். அதைக் கொண்டு வந்தது, திமுகவும் காங்கிரஸ் கட்சி தான். அதிமுக ஆட்சியில்தான், மருத்துவ கல்லூரியில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கினோம்.
கர்நாடகா தண்ணீர் தராததால் மூன்றறை லட்சம் ஏக்கர் பயிர் நிலம் கருகியது. ஆனால், அவர் தண்ணீர் கேட்டு தரவில்லை. ஸ்டாலினுக்கு அதிகாரம் தான் முக்கியம்; நாட்டு மக்கள் முக்கியமல்ல. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி கூட வழங்கவில்லை. விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியில் அதிக திட்டங்கள் கொண்டு வரப்பட்டதா? திமுக ஆட்சியில் அதிக திட்டங்கள் கொண்டு வரப்பட்டதா? என்பது குறித்து ஒரே மேடையில் விவாதிக்கலாம் என்றார்.