சென்னை:விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இன்று காலை முதல் ராஜா அண்ணாமலைபுரம், வேப்பேரி, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, போயஸ் கார்டன் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் அரசின் நுகர்வோர் வாணிப கழகத்தின் ரேஷன் பொருட்கள் சப்ளை செய்யக்கூடிய ஒப்பந்த நிறுவனமான அருணாச்சலா இம்பேக்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் செல்வராஜ் என்பவருக்கு தொடர்புடைய ராஜா அண்ணாமலைபுரம் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து துணை பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ள ஆதவ் அர்ஜூனா தொடர்புடைய நிறுவனம், வீடு உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆதவ் அர்ஜுனாவிற்க்கு சொந்தமான சென்னை போயஸ் கார்டன், கஸ்தூரி ரங்கன் சாலையில் இயங்கி வரும் அரைஸ் நிறுவன அலுவலகத்திலும், ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள ஆதவ் அர்ஜுனா இல்லத்திலும், அவருடைய மற்றொரு வீடான ஸ்போர்ட்ஸ் கிளப் பகுதியில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
போயஸ் கார்டன் பகுதியில் உள்ள அரைஸ் நிறுவன அலுவலகத்தில் 6க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அரைஸ் நிறுவனம் மைக்ரோ பைனான்ஸ், கன்சல்ட் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது அவரது மருமகனான ஆதவ் அர்ஜுனுடைய அரைஸ் நிறுவன அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மீண்டும் அதே அலுவலகத்தில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சோதனைக்கு பிறகு இந்த சோதனை எதன் அடிப்படையில் நடத்தப்பட்டது? என்ன மாதிரியான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது? உள்ளிட்ட தகவல்கள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "பிடித்திருந்தால் சேருங்கள்".. தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான இணைய முகவரி அறிமுகம்!