சென்னை:சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள முகத்துவாரத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வின்போது அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு சந்தித்த அவர் கூறியதாவது, "பொதுவாக மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளம் பாதிப்பால் சென்னை மாநகரம் பாதிக்கப்படுவது உண்டு.
அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எல்லாத் துறைகளுக்கும் முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அறிவுறுத்தலோடு நிற்காமல் அந்தந்த துறை செய்யக்கூடிய பணிகளுக்கு நிதியையும் முதலமைச்சர் ஒதுக்கினார்.
இதில் எங்கள் துறைக்கு (நீர்வளத்துறை) 38.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் 179 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் சில பணிகள் முடிவுற்றுள்ளன. இதனால் இந்தாண்டு பெய்த கனமழையால் சென்னை மாநகரில் வெள்ளத்தால் அதிக இடங்கள் பாதிக்கப்படவில்லை.
குறிப்பாக சென்னையில் வெள்ள நீர் கடலில் கலக்க வேண்டும் என்றால் மூன்று இடங்கள்தான் இருக்கிறது. ஒன்று கூவம் வழியாகவும், அடையார் வழியாகவும் எண்ணூர் வழியாகவும் கடலில் கலக்க வேண்டும். ஆனால் போதிய நீர் வழித்தடம் இல்லாத காரணத்தால் கடந்த காலங்களை நிறையப் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.