சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, எழும்பூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்த நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தலாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம்.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இன்று(ஏப்.20) காலை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்தைப் பெற்றேன். மத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற அடிப்படையிலே இந்தத் தேர்தல் பிரச்சாரம் அமைந்தது.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றனர். தேர்தல் பணியில் ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றி. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவு வரும் நாள், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளுக்கானப் பரிசாக தேர்தல் முடிவுகள் இருக்கும்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது மகளிர் உரிமைத் தொகை, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று உள்ளது. எல்லா வீடுகளிலும் தீப்பெட்டி இருப்பதால் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் எந்தச் சிரமமும் இல்லை. நகர, கிராமப் பகுதிகளில் பெருமளவிலான வரவேற்பு எனக்கு இருந்தது.