மதுரை:மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, "மாஞ்சோலை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 1929ஆம் ஆண்டு முதல் தொழிலாளர்கள் மாஞ்சோலையை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். தற்போது 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தேயிலைத் தோட்டப் பணிகளை தவிர வேறு பணிகள் இந்த தொழிலாளர்களுக்குத் தெரியாது.
2006 வன உரிமை சட்டத்தின்படி தொழிலாளர்கள் மாஞ்சோலையில் வாழ உரிமை உள்ளது. நீதிமன்றம் கேட்ட தகவல் வேறு, தமிழக அரசு நீதிமன்றத்தில் கொடுத்த தகவல் வேறாக உள்ளது. காவல்துறையை வைத்து மாஞ்சோலை தொழிலாளர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். தமிழக அரசு கொடுத்த நிவாரண அறிவிப்புகளில் நீதிமன்றத்திற்கு திருப்தி இல்லை. மாஞ்சோலை வழக்கில் மத்திய அரசின் பழங்குடியினத்துறையை இணைத்துள்ளோம்.
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு தமிழக அரசு கருணை காட்ட வேண்டாம், சட்டப்படி நிவாரணம் கொடுக்க வேண்டும். மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு யாரும் வேலை கொடுக்க தயாராக இல்லை. மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு ஏன் கருணை இல்லாமல் நடந்து கொள்கிறது எனத் தெரியவில்லை. டான் டீ நிறுவனம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.