சித்தேரி அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் திமுக-பாமகவினர் இடையே தகராறு..என்ன காரணம் தெரியுமா? ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சித்தேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பூத் எண் 70 ,71, 72 என மூன்று வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த வாக்குச்சாவடி மையத்துக்குக் கைத்தறித்துறை அமைச்சர் காந்தியின் மகன் வினோத்காந்தி பி.எல்.1 ஆக அவரது காருக்கு மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பாஸ் வாங்கிக்கொண்டு மொத்தம் 4 பேருடன் சித்தேரி வாக்குச்சாவடி மையத்துக்கு வந்துள்ளார்.
அப்போது அமைச்சரின் மகன் வினோத்காந்தியுடன் வந்த ஒருவர், பாமகவைச் சேர்ந்த ஒருவர் பாமக துண்டு மற்றும் சட்டையில் மாம்பழம் பேட்ஜ் அணிந்து கொண்டிருப்பதைப் பார்த்து வாக்குச்சாவடி மையத்துக்குள் இதுபோன்று இருக்கலாமா? உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது என்று கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, பாமகவைச் சேர்ந்த சிலர் 100 மீட்டர் இடைவெளியில் தானே கார் நிற்க வேண்டும். உங்களது கார் மட்டும் எப்படி உள்ளே வந்தது என்று கேள்வி எழுப்பியதால், இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும், அமைச்சரின் மகன் வினோத்காந்தியின் கார் சித்தேரியில் இருந்து வெளியே வர முயன்ற போது பாமகவைச் சேர்ந்த ஒருவர், காரின் பின்பக்கக் கண்ணாடியை உடைத்ததால் மீண்டும் திமுக - பாமகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலறிந்து விரைந்து வந்த அரக்கோணம் டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் போலீசார் இரு தரப்புகளையும் சமாதானம் செய்தனர். இந்நிலையில், தனது கார் கண்ணாடி உடைத்தது குறித்து வினோத்காந்தி அரக்கோணம் தாலுகா போலீசாரிடம் சித்தேரி ஊராட்சி மன்றத் தலைவரும், பாமக நிர்வாகியுமான கலைஞ்செழியன், பாரதி, கருணாகரன், ரவி மற்றும் 3 பேர் என்று குறிப்பிட்டு புகார் கொடுத்தார்.
இந்த புகார் மனுவை ஆய்வாளர் பழனிவேல் பெற்றுக் கொண்டார். மேலும், சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்ய வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தினர். இதுகுறித்து வினோத் காந்தி ஆதரவாளர்கள் கூறுகையில், "நாங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்று, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தோம். பாமகவினர் எங்களிடம் தகராற்றில் ஈடுபட்டு காரின் பின்பக்கக் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதனால், அவர்களைக் கைது செய்ய வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க:வேங்கைவயலில் தேர்தலைப் புறக்கணித்த மக்கள்! க்ளைமாக்ஸ் என்ன? - Lok Sabha Election 2024