சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் 71 ஆண்டுகள் நிறைவானதைக் கொண்டாடும் வகையில், 71 டாட்டூ (Tattoo) கலைஞர்களால், 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்தின் முகம் வலது கையில் டாட்டூ போடும் நிகழ்வு நடைபெற்றது. இந்தச் சாதனை கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது. இதனை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “நாளை கேப்டனின் 72வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு, டாட்டூ போடும் நிகழ்வு நடைபெறுகிறது. கேப்டன் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நாளை தேமுதிக அலுவலகத்தில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. கேப்டன் இல்லாத முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. அவர் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மன வலியோடு இதைக் கொண்டாடுகிறோம்” என்றார்.
விஜய் கட்சிக் கொடி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “நடிகர் விஜய் கட்சிக்கொடி அறிமுகத்திற்கு முன்பாக வீட்டிற்கு வந்து கேப்டனுக்கு மரியாதை செலுத்தி, கேப்டனின் ஆசிர்வாதத்தை வாங்கிச் சென்றார். தற்போது அவரது கட்சிக் கொடி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விஜய்க்கு தேமுதிக சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.
கொடியில் இருக்கும் சின்னம் சர்ச்சையானது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியல் என்றாலே சர்ச்சைகள்தான். அந்த சர்ச்சைகளை, சவால்களை முறியடித்து தான் வெற்றி பெற முடியும். இதுபோன்று பல சர்ச்சைகளை, சவால்களைச் சந்திக்க வேண்டிது தான் அரசியல். விஜய் புத்திசாலி, அமைதியான பையன், நிச்சயமாக இவற்றையெல்லாம் சமாளிப்பார் என்று நம்புகிறேன்.
திரை உலகில் நிறைய சவால்களைச் சந்தித்து வெற்றி பெற்று இருக்கிறார். அரசியலை சினிமா போன்று எடுத்துக் கொள்ள முடியாது. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் யோசித்து எடுத்து வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.