சென்னை:தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கிய பேரரசு, ஊர் பெயரில் படம் எடுத்து அதன் மூலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இவர், நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய திருப்பாச்சி, சிவகாசி ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அஜித்தை வைத்து திருப்பதி படத்தை இயக்கினார்.
கடந்த 2020ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜகவில் இணைந்தார். இதன் பின் சினிமா நிகழ்ச்சிகளில் இயக்குநர் பேரரசு பேசிய சில கருத்துகள் விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்நிலையில், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இயக்குநர் பேரரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜனநாயக அபாயம்! இன்று தமிழகத் தேர்தலில் மிகவும் நேர்மையான தலைவர் வந்தாலும், மக்களை உண்மையிலேயே நேசிக்கிற தலைவன் வந்தாலும் வெற்றியடைவது மிகவும் சிரமம்.
காரணம் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும், ஓட்டுக்குப் பணம் வாங்குவதுமான கேடுகெட்ட கலாச்சாரம் பெருகிவிட்டது. ஊழல்வாதிகளை அடையாளம் காட்டுவதாலோ, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களைச் சிறையில் அடைப்பதாலோ ஒரு கட்சியைப் பலவீனப்படுத்திவிட முடியாது.
ஓட்டுக்குப் பணம் எனும் பெரும் ஊழலில் அரசியல்வாதிகளும், மக்களும் மூழ்கி ஜனநாயகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாகடித்துக் கொண்டிருக்கும்போது நேர்மையாவது,தூய்மையாவது. எவன் பணம் கொடுக்கிறான்?. இதில் ஆர்வமாய் உள்ள மக்கள் அவன் எப்படிப்பட்டவன் என்பதை ஆராய்வதில்லை என்பது ஜனநாயக அபாயம்.
பதவியிலிருந்த அரசியல்வாதிகளின் ஊழலை நிரூபிப்பது ஒருபுறம் இருந்தாலும், ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும்,வாங்குவதையும் இரும்புக்கரம் கொண்டு முற்றிலும் தடுத்தால்தான் இனி சரியான மனிதர்கள், தலைவர்கள் வெற்றியடைய முடியும். ஓட்டிலே ஊழல் துவங்கும்போது பின் நாட்டில் எப்படி ஊழலை ஒழிக்க முடியும். ஓட்டுக்குப் பணம்! நாட்டை விற்பதற்குச் சமம்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “காரணம் இல்லாமல் மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்படாது” - ஈரோட்டில் முதலமைச்சரிடம் பெண் முறையீடு! - MK Stalin Election Campaign