தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் விட்டதை பிடிக்க முயலும் பாமக.. தக்க வைக்குமா திமுக? - ரேஸில் முந்துவது யார்? - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Dharmapuri constituency: காலம் காலமாக தமிழக தேர்தலில் சாதி அதிகம் ஆதிக்கம் செலுத்தும் தருமபுரி தொகுதி தற்போது திசை மாறி பெண்களையும், புதிய வேட்பாளர்களையும் குறிவைத்து நகர்கிறது. அப்படி, தருமபுரி நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்ற, பாமக ஒரு புறம் குடும்ப பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள நிலையில், வெற்றியை தக்க வைக்க திமுக தீவிரம் காட்ட, தேர்தல் ஓட்டத்தில் அதிமுக நகர்கிறது. ஆனால் கள நிலவரம் சொல்வது என்ன? இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

lok sabha election 2024
lok sabha election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 3:31 PM IST

Updated : Apr 17, 2024, 3:57 PM IST

தருமபுரி: தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்றாக இருக்கும் தருமபுரி தொகுதி, இந்த தேர்தலிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து முக்கிய தொகுதியாக மாறியுள்ளது. இது வரையில், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் வாழப்பாடி ராமமூர்த்தி, அன்புமனி ராமதாஸ் போன்ற பல முக்கிய தலைவர்கள் போட்டியிட்டு வென்றுள்ளதால், இந்த தொகுதி அதிகம் கவனிக்கப்படும் தொகுதியாகவே இருந்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி என ஐந்து சட்டமன்ற தொகுதிகளும் சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதி என ஆறு சட்டமன்ற தொகுதிகளை இத்தொகுதி உள்ளடக்கியது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சி தருமபுரி, பென்னாகரம், மேட்டூர் என மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் அதிமுக கூட்டணியின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட நிலையில் தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமக வெளியேறி பாரதிய ஜனதா, அமமுக உள்ளட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.

தருமபுரி வேட்பாளர்கள்:தருமபுரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணியும், திமுக வேட்பாளராக வழக்கறிஞர் ஆ.மணியும், அதிமுக வேட்பாளராக தருமபுரி அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி மகன் மருத்துவர் அசோகன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பொன்னிவளவன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணியில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் செந்தில்குமார் 65 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக ஒரு சட்டப்பேரவை தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

சௌமியா அன்புமணியின் கணக்கு செல்லுமா?: இவ்வாறான அரசியல் சூழ்நிலையில், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பாக, அதிக அளவு கிராமப் பகுதியை குறிவைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மற்ற கட்சி வேட்பாளர்கள் செல்லாத கிராமங்களுக்கு கூட சென்று பொதுமக்களிடம் நேரடியாக வாக்கு சேகரித்தார். சௌமியா அன்புமணி பெண்கள் மத்தியில் நேரடியாக சென்று தனக்கு ஆதரவு அளிக்கும்படி நேரடியாக பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனால் அவரை எளிதில் அணுகக்கூடிய வேட்பாளராக மாறியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தனது கணவர் அன்புமணி ராமதாஸ் தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் பெண்களின் வாழ்க்கை மையப்படுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். செளமியா அன்புமணிக்கு ஆதரவாக அவரது மூன்று பெண் பிள்ளைகளும் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது எனச் சொன்னால் மிகையில்லை.

வீடு வீடாக சென்ற பிள்ளைகள், மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்களிடம் அதிக ஆதரவை பெற்றுள்ளனர். ஏற்கனவே, பாமகவிற்கு செல்வாக்கு இருக்கும் பட்சத்தில், பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது, சௌமியா அன்புமணிக்கு சாதகமாக அமையும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தக்கவைக்குமா திமுக?: திமுக சார்பில் போட்டியிடும் ஆ மணி-க்கு, ஆதரவாக தருமபுரி திமுக மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாருமான பழனியப்பன், தமிழக வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், எம்பி செந்தில்குமார் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு திமுகவை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கில் களப்பணி ஆற்றி வந்தனர். அந்தந்த பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள், இஸ்லாமிய கிறிஸ்தவ தலைவர்கள் என பல்வேறு தரப்பட்ட தலைவர்களை திமுக முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆதரவை கோரினர்.

திமுகவுக்கு தருமபுரி சட்டமன்ற தொகுதியான அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, மேட்டூர், பென்னாகரம் தருமபுரி நகரப் பகுதியில் திமுகவிற்கு அதிக அளவு வாக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் திமுகவினரிடம் உருவாகியுள்ளது. தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி உள்ளிட்டவை திமுக வேட்பாளருக்கு சாதகமாக உள்ளது. ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆ.அணி போட்டியிட்டு தோல்வியடைந்த காரணமாக அவருக்கு இந்த முறை வாக்களிக்கலாம் என்ற மனநிலை வாக்காளர்களிடம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

போட்டியில் அதிமுகவின் நிலை என்ன?: அதிமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் அசோகன் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி பதவியை ராஜினாமா செய்து முதன் முறையாக தேர்தலை சந்திக்கிறார். இவரது தந்தை பூக்கடை ரவி, தருமபுரி அதிமுக நகரச் செயலாளராக இருக்கிறார். இவர் தனது மகனை சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக பதவியில் அமர வைக்க வேண்டும் என்ற கனவை நினைவாக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு பெற்று மாவட்டம் முழுவதும் பம்பரமாக சுழன்று வருகிறார்.

அதிமுக பலமாக உள்ள பாலக்கோடு தொகுதியில் அதிமுகவிற்கு கூடுதலான வாக்குகளும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், தருமபுரி தொகுதியில் குறிப்பிட்ட அளவு வாக்குகளும், பென்னாகரம் மற்றும் மேட்டூர் பகுதியில் ஓரளவு கணிசமான வாக்குகளும் அதிமுகவுக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மூன்று சட்டப் பேரவை தொகுதிகளில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதால் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அதிமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நாம் தமிழரின் முயற்சி என்ன?:நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அபிநயா பொன்னிவளவன் மாவட்டத்தில் ஓரளவு அனைத்து பகுதிகளில் நேரடியாக சென்று பிரச்சாரத்தில் மேற்கொண்டார். நாம் தமிழர் கட்சிக்கு புதிய வாக்காளர்கள் அதிக அளவு வாக்களிப்பார்கள் என்பதால் இளைஞர்களை குறிவைத்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. முதல் முறை வாக்காளர்கள் சீமான் பேச்சுக்களால் ஈர்த்து நாம் தமிழர் கட்சிக்கான ஆதரவு பெருகியுள்ளதாக கூறப்படுகிறது.

தருமபுரியை கைப்பற்றப்போவது யார்?: வழக்கமாக தருமபுரி தொகுதியில் வெற்றி நிலையை நிர்ணயிக்கும் சக்தியாக சாதி என்ற நிலை மாறி, இப்போது பெண்களின் வாக்கை மையப்படுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சௌமியா அன்புமணியை களம் இறக்கி உள்ளார். இத்தேர்தலில், திமுக அல்லது பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இருப்பினும், பெண் வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் தான் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர்.

இதனால், பெண் வாக்காளர்கள் சௌமியா அன்புமணி ஆதரித்தால் 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என பேசப்படுகிறது. இருப்பினும் மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஜூன் 4ம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: திருச்சி தொகுதியில் திருப்புமுனையை ஏற்படுத்தப்போவது யார்.. வெற்றி வாய்ப்பு யாருக்கு? - Lok Sabha Election 2024

Last Updated : Apr 17, 2024, 3:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details