சென்னை: சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள், யார் எனத் தெரியாமல் தாங்களாகவே தகவல்களைக் கொடுப்பதாகவும், அதை வைத்துத்தான் குற்றவாளிகள் எளிதில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும், இந்தியா அளவில் சைபர் குற்றம் சார்ந்த புகார்களில், சிஎஸ்ஆர் மற்றும் எஃப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது எனத் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
தமிழ்நாடு சைபர் கிரைம் சார்பாக சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான நோக்கத்தோடு நடத்தப்பட்ட ஹேக்கதான் 2025 நிகழ்ச்சியில் பங்கேற்று, வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் பரிசு தொகைகளை வழங்கி வாழ்த்தினார்.
அதாவது, சைபர் குற்றங்களைத் தடுப்பதற்காக ஹேக்கத்தான் 2025 என்கிற நிகழ்ச்சி காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் 54 அணிகள் மட்டும் முதல் சுற்றில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது சுற்று நேற்று முன்தினம் (பிப்.4) காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
ஏடிஜிபி சந்தீப் மிட்டல், டிஜிபி சங்கர் ஜிவால் இருவரும் மேடையில் அமர்ந்துள்ள புகைப்படம் (ETV Bharat Tamil Nadu) அதில் முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாய், 2-வது பரிசு 75 ஆயிரம் ரூபாய், மூன்றாவது பரிசு 50 ஆயிரம் ரூபாய், மற்ற 12 அணிகளுக்கும் ஆறுதல் பரிசாக 5,000 ரூபாய் வழங்கப்படும் என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், 54 அணிகளில் இருந்து 15 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று (பிப்.5) மாலை டிஜிபி அலுவலகத்தில் ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசுத்தொகைகளை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கினர்.
ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு டிஜிபி பரிசு வழங்கும் புகைப்படம் (ETV Bharat Tamil Nadu) அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய டிஜிபி சங்கர் ஜிவால், "சைபர் குற்றம் சார்பாக அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 99 சதவீதம் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே சைபர் குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்தவர்கள். அதை வைத்துதான் குற்றவாளிகள் எளிதில் குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
டிஜிபி சங்கர் ஜிவால் மேடைப்பேச்சு (ETV Bharat Tamil Nadu) இன்றைய காலகட்டத்தில் டெக்னிக்கலாக நிறைய மாணவர்கள் சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பாக தகவல்கள் கொடுத்துள்ளனர். அதன்படி இந்த முறை ஹேக்கத்தானில் 54 அணிகள் கலந்து கொண்டுள்ளது. அதில் 15 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க:"தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" - முதலமைச்சரிடம் நேரில் வலியுறுத்திய வேல்முருகன்!
சைபர் குற்றம் சார்ந்த புகார்களில் சிஎஸ்ஆர் மற்றும் எஃப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் இந்திய அளவில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு பின்னர்தான், கர்நாடகா போன்ற மாநிலங்கள் உள்ளது. மேலும், 1930 சைபர் ஹெல்ப்லைனில் தினமும் சராசரியாக 750 அழைப்புகள் பெறப்படுகின்றன மற்றும் என்சிஆர்பி போர்ட்டலில் தினசரி 450 வழக்குகள் பதிவாகியுள்ளன. 1930 என்ற சைபர் கிரைம் ஹெல்ப்லைன் கட்டுப்பாட்டு அறைக்கு 2024ல் மட்டும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட (2,68,875) அழைப்புகள் வந்துள்ளது. தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் கோரிக்கையின் அடிப்படையில், ஐந்து சூதாட்ட இணையதளங்கள் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை கலந்து கொண்ட மாணவர்கள் ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள். அதில் ஒரு சில ஆலோசனைகள் காவல்துறை எடுத்துக் கொண்டுள்ளது. அதன்படி இந்த முறையும் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.