திண்டுக்கல்: முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவர். தமிழகத்திலிருந்து மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த நிலையில், தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நாளை (ஜன.24) ஆறாம் திருவிழாவில் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஏழாம் நாளான வரும் 25ஆம் தேதி அன்று மாலை, பூச நட்சத்திரத்தில் தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை ஆக வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், இன்று (ஜனவரி.23) ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர். மேலும், முருகன் பக்தி பாடலை பாடி கிரிவலப் பாதையில் குவிந்து வருகின்றனர்.
குடிநீர், கழிவறை, தங்குமிடம், மருத்துவ வசதி உள்ளிட்ட பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் வருகை தருவதால் பாதுகாப்பு கருதி, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 500க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளும், ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.