சென்னை: தமிழநாட்டில் பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கையை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு நடத்தி வருகிறது. 2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பிஇ , பிடெக் படிப்பில் இளங்கலையில் 2 லட்சத்து 33ஆயிரத்து 376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்கி உள்ளது.
அதில் ஒற்றை சாரள முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 6ஆம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 12ஆம் தேதி வரை நடந்தது.
மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிட்டப்பட்டன. பொதுப்பிரிவில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தேதி தொடங்கி, செப்டம்பர் 3ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
சிறப்புப்பிரிவு இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவடைந்து, முதல் சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2, 3, 4 ஆகிய சுற்றுகளில் சேர உள்ள மாணவர்களின் விபரங்கள் மொபைல் எண்ணுடன் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விபரங்கள் குறைவாக சேரும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் கிடைத்திருக்கின்றன.
மாணவர்களின் மொபைல் எண்களுடன் கூடிய விவரங்கள், தனியார் கல்லூரிகளை சேர்ந்த புரோக்கர்கள் கைகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்றது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. கலந்தாய்வை நடத்தக்கூடிய தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், கலந்தாய்வுக்கான இணையதளத்தில் மாணவர்களின் பல்வேறு விவரங்களை வெளியிடுகின்றன.