கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு தஞ்சாவூர்:மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அறிவிப்பு, நாட்டின் ஜனநாயக தேர்தல் மீது சந்தேகத்தை எழுப்புவதாக சிபிஎம் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சாவூரில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று (பிப்.2) சிபிஜ (எம்எல்) கட்சி சார்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, 'மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், இந்தியாவில் பெரும்பான்மை ஏழை, எளிய மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டாகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மேலும் சலுகைகளை வாரி வழங்கும் கொள்கைகளை உடையதாகவும் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் மற்றும் புயல் சேதத்திற்கு, நிவாரண நிதி அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.37 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நேரடியாக வற்புறுத்தினார்கள்.
இதற்கு 27ஆம் தேதிக்குள் நிவாரண நிதி வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், 27 ஆம் தேதி கடந்த விட்ட நிலையில் நிவாரண நிதியும் வழங்கவில்லை, நிதிநிலை அறிக்கையிலும் இது தொடர்பாக ஏதும் அறிவிக்கவில்லை. ஆகவே, தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கக் கூடிய, ஓரவஞ்சனை செய்யக்கூடிய பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கிறது. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கான நிதி ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டின் நிதி திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை. மக்களை கவர்வதற்கு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்கள்' என குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், 'அடுத்த பட்ஜெட்டை தாங்கள் தான் வெளியிடுவோம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நாட்டில் மக்கள் முறைப்படி ஓட்டு போடுவது போன்று இல்லாமல், அவர்களே தேர்தலை அறிவித்துவிட்டு, தேர்தலை நடத்தாமல் ஆட்சிக்கு வருவார்கள் போன்று தோன்றுகிறது என்று கூறினார்.
மேலும், மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (Electronic Voting Machine) முறையை மாற்ற வேண்டும், விவி பேட் இயந்திரத்தை 100% வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், அவற்றை செய்ய மறுக்கிறார்கள். மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தி மற்றும் ராமரை வீதிக்கு வீதி கொண்டு வந்து, ஓட்டு கேட்டு ஆட்சிக்கு வரலாம் என நினைக்கின்றனர். மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு நாட்டின் ஜனநாயக தேர்தல் மீது சந்தேகத்தை எழுப்புகிறது' என அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: “எம்ஜிஆர் போட்ட பிச்சை.. அண்ணாவை ஆட்சியில் அமர வைத்தது யார்?” - கே.சி.வீரமணி கடும் தாக்கு!